சீனாவின் உளவு பலூன் விவகாரம் – ஜப்பானின் எச்சரிக்கை !!
ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு மேல் பறந்துகொண்டிருந்த பலூன்கள் சீனாவின் உளவு பலூன்கள் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில், பல புதிய ஆதாரங்களை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஜப்பான் தங்கள் நாட்டின் மீது பலூன்கள் பறந்துக்கொண்டிருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளதோடு, தேவைப்பட்டால் அவற்றை சுட்டு வீழ்த்துவதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, உளவு பலூன் விவகாரத்தில், சீனா அமெரிக்காவிற்கு இடையே பல்வேறு முறுகல்கள் காணப்படுகிறது.
குறிப்பாக, கடந்த பெப்ரவரி மததத்தில், அமெரிக்கா கடற்கரை பகுதியில், சுற்றி வந்த சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் ஓர் உளவு பலூன் அல்ல என்றும், அது ஒரு சிவிலியன் ஏர்ஷிப் என்றும் சீனா கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், அது வானிலை ஆய்வு போன்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது எனவும், அது திட்டமிடப்படாத நிகழ்வு எனவும் சீனா தெரிவித்துள்ளது
இந்நிலையில், சி ஐ ஏ-வின் கிழக்காசிய ஆய்வாளர் ஜான் கல்வர், இது ஒரு தடவை மட்டும் அல்ல, சுமார் 5 ஆண்டுகளாக இச்சம்பவம் இடம்பெற்று வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதேவேளை நாட்டு மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தவும் தயார் என ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சீனாவின் உளவு பலூன் விவகாரம் தொடர்பில் சீனா இதுவரையிலும் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.