உ.பி.யில் பீம் ராணுவத் தளபதி மீது துப்பாக்கிச்சூடு- மருத்துவமனையில் அனுமதி!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன். இவர், தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், இரண்டு தோட்டாக்கள் கார் மீது பாய்ந்தது. முதல் தோட்டா காரின் இருக்கை மீது பாய்ந்தது. மற்றொரு தோட்டா கதவு வழியாக சென்றபோது ஆசாத்தின் இடுப்பை உரசியது. பின்னர் மர்ம நபர்கள் தப்பியுள்ளனர். சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி விபின் தடா கூறுகையில், “சந்திர சேகர் ஆசாத்தின் கான்வாய் மீது காரில் வந்த ஆயுதம் ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஒரு தோட்டா அவரைத் தாண்டிச் சென்றது. அவர் நலமாக உள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்றார். காயமடைந்த ஆசாத் மற்றும் அவரது சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை பீம் ஆர்மி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
மேலும், பீம் ஆர்மி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,”சஹாரன்பூரில் உள்ள தியோபந்தில் பீம் ஆர்மி தலைவரும் தேசியத் தலைவருமான பாய் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல், பகுஜன் மிஷன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தும் கோழைத்தனமான செயல். குற்றம்சாட்டப்பட்டவர்களை விரைவாகக் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியத் தலைவர் பாய் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.