பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறோம், ஆனால்.. முக்கிய கருத்தை வலியுறுத்திய ஆம் ஆத்மி!!
பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி இந்த சட்டத்திற்கு ஆதரவாக உள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதக் கூறியதாவது:- கொள்கை அளவில் நாங்கள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின் 44வது பிரிவு நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது.
ஆனால் இது அனைத்து மதங்களுடனும் தொடர்புடையது என்பதால், இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்து மதத்தினரிடம் இருந்தும், அரசியல் கட்சியினரிடம் இருந்தும் ஆலோசனைகளை பெறவேண்டும். ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைவரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கு ஒரு சட்டம் இருந்தால் வீட்டை ஒழுங்காக நடத்த முடியாது, அதுபோல்தான் இரண்டு சட்டங்களில் நாடு இயங்க முடியாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.