ஹோட்டல் அமைப்பதற்கு காணி வழங்க தீர்மானம்!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி நிறுவனத்துக்கு சொகுசு ஹோட்டல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.
தற்போது இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தை அண்டிய ஒரு காணி மற்றும் நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவு ஆகியவை 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை முழு வெளிநாட்டு முதலீடு செய்து ஹோட்டல் வளாகத்தை நிர்மாணித்து பராமரிக்கும் திட்டத்துக்காக வழங்கப்படவுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கெப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நேரடி முதலீடு, அடிப்படையில் குறித்த காணியை கையகப்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நிறுவனத்துக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்குவதற்காக, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.