;
Athirady Tamil News

869 வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன !!

0

அரச வீடமைப்பு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட சுமார் 869 வீடுகளும் 619 கடைகளும் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதன்படி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமோ அல்லது வேறு அரச நிறுவனமோ இதுபோன்ற கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தி முறையான தொழில்நுட்ப அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கு என எதிர்பார்க்கப்படுகிறது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எஸ்.சத்யானந்தா தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப அறிக்கையின் பரிந்துரைகளின்படி வீடமைப்புத் தொகுதிகள் மீள்அபிவிருத்தி அல்லது மேம்படுத்தல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பற்றதாக இனங்காணப்பட்ட 8 வீட்டுத் தொகுதிகள் தொடர்பில் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையானது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

வேகந்த வீடமைப்புத் திட்டம், பம்பலப்பிட்டி வீடமைப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை வீடமைப்புத் திட்டம், சிறிதம்ம மாவத்தை வீடமைப்புத் திட்டம், கம்கருபுர வீடமைப்புத் திட்டம், மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டங்கள், மிகிந்து மாவத்தை வீடமைப்புத் திட்டம் ஆகியவற்றில் சுமார் 869 வீடுகளும் 619 கடைகளும் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில். உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு கட்டிடங்களைக் கொண்ட வேகந்த வீடமைப்புத் திட்டம் 1981 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் கட்டப்பட்டது. இது 114 வீடுகளைக் கொண்டுள்ளது. தற்போதுள்ள அபாய நிலையைக் கருத்தில் கொண்டு அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஹேனமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு இணங்காத சுமார் 65 குடும்பங்கள் இன்னமும் அந்த வீட்டுத் தொகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர். அந்த 65 குடும்பங்களை உடனடியாக வெளியேற்றும் வகையில் அரச மற்றும் தனியார் பங்காளித்துவத்தின் கீழ் வீடமைப்பை மீள் அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி வீடமைப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை வீடமைப்புத் திட்டம், சிறிதம்ம மாவத்தை வீடமைப்புத் திட்டம், கம்கருபுர அடுக்குமாடி குடியிருப்பு, மிஹிந்துபுர வீடமைப்புத் திட்டம் மற்றும் மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டம் போன்றவற்றில் உள்ள பல கட்டிடங்களுக்கு இதேபோன்ற தொழில்நுட்ப அறிக்கையைப் பெறுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு வீடமைத் திட்டம் கட்டப்பட்டு குடியிருப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவை முறையாகப் பராமரிக்கப்பட்டு முகாமைத்துவக் ககூட்டுத்தாபனம் எனப்படும் அந்தந்த குடியிருப்பாளர்களைக் கொண்ட சட்டக் கட்டமைப்பால் நடத்தப்படுகின்றன. அந்தந்த குடியிருப்பு தொகுதியில் உள்ள பொதுவான வசதிகளை முகாமைத்துவக் கூட்டுத்தாபனம் முறையாக பராமரிக்காததே, இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.