ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை மத்திய அரசு மறந்து விட்டது: ராகுல் காந்தி!!
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ள அவர், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை மத்திய அரசு மறந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:- தக்காளி: கிலோவுக்கு ரூ.140, காலிபிளவர்: ரூ.80, துவரம் பருப்பு: ரூ.148, கியாஸ் சிலிண்டர் ரூ.1,100-க்கு மேல். பெருமுதலாளிகளின் சொத்துகளைப் பெருக்கி, பொதுமக்களிடம் வரி வசூலிப்பதில் மும்முரமாக இருக்கும் பா.ஜனதா அரசு, ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களை மறந்து விட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. வேலை இருந்தாலும் வருமானம் குறைவு. விலைவாசி அதிகரிப்பால் சேமிக்க முடியவில்லை. ஏழைகள் சாப்பிட ஏங்குகிறார்கள், நடுத்தர வர்க்கத்தினர் சேமிக்க ஏங்குகிறார்கள்.
விலைவாசி உயர்வில் இருந்து சற்றே நிவாரணம் பெறுவதற்காக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கியாஸ் சிலிண்டர் விலையை குறைத்து உள்ளன. அந்த பணத்தை ஏழை மக்களின் கணக்குகளில் செலுத்துகின்றன. இந்திய ஒற்றுமை பயணம் என்பது வெறுப்பை அகற்றவும், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் சமத்துவத்தை கொண்டு வரவும் உறுதியளிக்கிறது. மேலும் பொதுப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப பா.ஜனதாவை அனுமதிக்காது.
கடந்த 9 ஆண்டுகளாக ஒரே கேள்விதான் நீடிக்கிறது. அதாவது இந்த அமுத காலம் யாருக்கு? என்பதே அது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். இதைப்போல, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசை சாடியுள்ளது. பா.ஜனதா கட்சி வெறுப்பு அரசியல் மூலம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.