மருத்துவ பட்டதாரிகளால் கடும் நெருக்கடி!!
1,400 மருத்துவ பட்டதாரிகளில் இவ்வருடம் ஏப்ரலில் மருத்துவ பயிற்சிகளை நிறைவு செய்த 300 பட்டதாரிகள், வைத்திய நியமனங்களைப் பெற மறுப்பதால் நாட்டின் சுகாதாரத்துறை இக்கட்டான சூழலுக்கு முகங்கொடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவ சபையின் பதிவை மருத்துவ பயிற்சியை நிறைவு செய்த பின்னரே பெற முடியுமென கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.
“உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற மருத்துவ பட்டதாரிகள் மருத்துவ பயிற்சியை மேற்கொள்வதில்லை என்பது தற்போதைய புதிய பிரச்சினை. அவர்களும் நாட்டை விட்டுச் செல்கின்றனர். அவர்கள் நாட்டிலிருந்து செல்வதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
”18, 600 மருத்துவர்களில் 1,500 தொடக்கம் 1,700 வரையான மருத்துவர்கள் தமது தொழிலை விட்டுவிட்டனர். அதேவேளை 748 மருத்துவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெறுகின்றனர்.
வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு செல்லும் மருத்துவ பட்டதாரிகள் மீண்டும் நாட்டிற்கு வருவதில்லை” என அவர் தெரிவித்தார்.
பயிற்றப்பட்ட மரத்துவர்களின் பற்றாக்குறை, மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை அமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக வைத்தியர் ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.