எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நடைபெறும்: சரத் பவார் அறிவிப்பு!!
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் நிதிஷ் குமார்,” வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம்” என கூறினார். இந்நிலையில், 2வது கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ம் தேதிகளில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.