திருவனந்தபுரத்தில் துப்பாக்கியை காட்டி தொழில் அதிபரை கடத்த முயன்ற 2 போலீஸ்காரர்கள் கைது!!
திருவனந்தபுரம் அருகே உள்ள கட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் முஜித். இவர் அங்குள்ள மார்க்கெட் சந்திப்பில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் இரவில் கடையை அடைத்து விட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இரவு 10 மணியளவில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் கார் சென்றபோது இருளில் மறைந்திருந்த 3 பேர் திடீரென வந்து காரை மறித்துள்ளனர். அவர்களில் 2 பேர் போலீஸ் சீருடையில் இருந்ததால், முஜித் காரை நிறுத்தி உள்ளார். அவர்கள், அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் இருந்து வருவதாகவும், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் முஜித்திடம் கூறி உள்ளனர். ஆனால் அதனை நம்ப அவர் மறுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து 3 பேரில் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முஜித், கூச்சலிட்டார். இதனை கேட்டு அந்தப்பகுதியில் மக்கள் திரண்டனர். இதனால் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேர் பற்றிய விவரம் கிடைத்தது.
போலீஸ் உடையில் இருந்தவர்கள், பொன்முடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் கிரண் மற்றும் சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீஸ்காரர் வினீத் என்பதும் மற்றொருவர் அவர்களது நண்பர் அருண் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் டைல்ஸ் விற்கும் கடை நடத்தி வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழில் அதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.