முன்பக்க லேண்டிங் கியர் இல்லாமல் தரையிறங்கிய விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள சார்லோட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று டெல்டா விமானம் ஒன்று, முன்பக்க லேண்டிங் கியர் இல்லாமல் அவசரமாக தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தனது அதிகாரபூர்வ முகநூலில் டெல்டா விமான நிறுவனம் பதிவிட்டுள்ளது. ஓடுபாதை மூடப்பட்டதாகவும், ஓடுபாதையில் இருந்து அந்த விமானத்தை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், மேலும் விரைவில் ஓடுபாதை திறக்கப்படும் என்றும் பதிவிட்டிருந்தது. டெல்டா விமான நிறுவனம் அளித்திருக்கும் தகவல்களின்படி, அட்லாண்டாவிலிருந்து காலை 07:25 மணியளவில் புறப்பட்ட அந்த போயிங் 717 ரக விமானத்தில் 96 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 3 விமான பணிப்பெண்கள் இருந்திருக்கின்றனர். தரையிறங்கியதும் அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர். அந்த விமானம் சார்லோட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கும்போது, முன்பக்க லேண்டிங் கியர் பாதுகாப்பாக இல்லை என்ற சமிக்ஞை குறிப்பை விமானிகள் கண்டனர்.
இதனை ஆராயவும் செய்தனர். பின்னர் விமானம் சார்லோட்டில் உள்ள கட்டுப்பாட்டு மைய கோபுரத்தை கடந்து சென்றபோது, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானத்தின் முன்பகுதியை பார்த்து ஆய்வு செய்தனர். இதில் முன்பக்க லேண்டிங் கியர் கதவுகள் திறந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், கியர் கீழே இறங்காமல் இருந்திருக்கிறது. அதன்பின்னர் விமானத்தை அப்படியே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு கடினமான தரையிறங்குதலுக்கு தயாராகுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பயணிகளில் ஒருவரான கிறிஸ் ஸ்கோடார்சாக் கூறும்போது, விமானம் தரையிறங்கும்போது எந்த பெரிய குழப்பமும் இல்லை என்றும் விமானத்தில் இருந்த பணிக்குழு சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறி அவர்களை பாராட்டினார். இதுதொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் கூறியிருக்கிறது.