;
Athirady Tamil News

அரிய வகை நோய்: கர்ப்பகாலத்தில் கடுமையான வாந்தியால் அனைத்து பற்களையும் இழந்த பெண்!!

0

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் வருவது இயற்கை. பிரசவம் முடிந்ததும் இந்த அறிகுறிகள் நின்று விடும். ஆனால் அரிதான ஒரு நிகழ்வாக, பிரிட்டனில் ஒரு பெண் கர்ப்பகாலத்தின்போது கடுமையாக வாந்தியெடுத்ததால் பற்கள் அனைத்தையும் அகற்ற வேண்டிய நிலைக்கு சென்றுள்ளார். கூப்பர் என்பவரின் மனைவி(26), 2017 வருடம் பிரான்சில் உள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் செவிலித்தாயாக பணிபுரிந்தபோது கர்ப்பமானார். பிறகு ஒரு வாரத்திற்குள் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், கர்ப்ப காலத்திலேயே அவர் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்ப வேண்டியிருந்தது. அங்கு அவருக்கு, “ஹைபர்யெமெசிஸ் கிராவிடரம்” (Hyperemesis Gravidarum) என்ற அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஹெச்.ஜி. நோயானது 1% பெண்களை மட்டுமே பாதிக்கின்ற ஒரு அரிய மற்றும் தீவிரமான கர்ப்பகால நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அடிக்கடி வாந்தி எடுப்பார்கள். இந்த நோயின் தாக்கம் காரணமாக அவரது பற்கள் விழ ஆரம்பித்தன.

அவர் கடுமையாக வாந்தி எடுத்தார். இந்த கடுமையான உடல் உபாதைகளுக்கு மத்தியில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்ததும் அவருடைய வாந்தியெடுத்தல் மற்றும் குமட்டல் அறிகுறிகள் நின்றுவிட்டன. ஆனால், 6 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு, வாந்தியின் அமிலத்தன்மையால் சேதமடைந்த பற்கள் அனைத்தையும் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில வருடங்களுக்கு பிறகு அவர் மேலும் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அந்த 2 முறையும் எச்.ஜி. (HG) நோய் பாதிப்பு இருந்திருக்கிறது. இந்த நோய் மற்றும் நோயின் பாதிப்பிலிருந்து மீண்டது, உணவு முறை, மற்றும் தற்போதைய முக தோற்றம் குறித்து அவர் கூறியதாவது: இந்த நிகழ்வு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. எனது மோசமான எதிரிக்கு கூட இந்நிலை வர நான் விரும்பமாட்டேன்.

இறப்பது போல் ஒரு உணர்வு வருவதால், பலர் இதனை புற்றுநோய் சிகிச்சைக்காக கொடுக்கப்படும் கீமோதெரபியின் பக்க விளைவுகளுடன் ஒப்பிடுகிறார்கள். இது ஒரு விரும்பத்தகாத நிலை. இது உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை சோர்வடைய செய்கிறது. இப்போது என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. இயல்பு நிலைக்கு திரும்பி விட்டேன். வாழ்க்கை மிகவும் நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஹெச்.ஜி. வந்து 9 மாதங்கள் படுக்கையில் இருக்கும்போது மிகுந்த வேதனை அடைந்தேன். நான் இப்போது பற்கள் இல்லாத நிலைமையை ஏற்றுக்கொண்டு வாழ பழகிவிட்டேன். எனது உணவுப்பழக்கம் முன்பு போல் இல்லை.

ஏனெனில் அது இந்நோயினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நான் இறைச்சியை அதிகம் உண்பதில்லை. முக்கியமாக நான் காய்கறிகளை சாப்பிடுவதை கடைபிடிக்கிறேன். எனக்கு இப்போது செயற்கை பற்கள்தான் உள்ளன. ஆனால், அவை முக அழகுக்காக அணிய வேண்டியவையே தவிர மிக வசதியானவை என்று கூற முடியாது. அதனால் நான் இப்போது பற்கள் இல்லாமல் சகஜமாக வீட்டை விட்டு வெளியேற பழகிக் கொண்டு விட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.