பிரான்ஸில் வெடித்தது கலவரம் – நாடளாவிய ரீதியில் 421 பேர் கைது!!
பிரான்ஸில் வெடித்த கலவரத்தை அடுத்து நாடு முழுவதும் குறைந்தது 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று Le Figaro செய்தி வெளியிட்டுள்ளது.
அவற்றில் 242 சுற்றிவளைப்பு பாரிஸ் பிராந்தியத்தில் நடந்ததாக உள்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன சோதனையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆபிரிக்க வம்சாவளி சிறுவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அது வன்முறையாக வெடிக்க, தொடர்ந்து இரண்டாவது நாளாக பாரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அமைதியை நிலைநாட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆபிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள அதிபர் இமானுவேல் மக்ரோன், “இது மன்னிக்கமுடியாத குற்றம். சட்டம் தனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டதால் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரிஸ் நகரின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை இரவு சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காரை காவல்துறையினர் நிறுத்த உத்தரவிட்டும் அது நிறுத்தப்படாததால் காவல்துறையினர் அதனை விரட்டி சுற்றி வளைத்துள்ளனர்.
பின்னர் காரில் இருந்த ஆபிரிக்க சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அச்சிறுவன் உயிரிழந்தார். இது பாரிஸ் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. பாரிஸ் இன ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. இங்கே பல்வேறு இனத்தவர், கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் கருப்பின இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.
வடக்கு நகரான லில்லி, டோலூஸ், தென்மேற்கு நகரங்களான அமியன்ஸ், டிஜோன், எஸ்ஸோன் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். குப்பைத் தொட்டிகளுக்குத் தீவைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். எஸ்ஸோன் பகுதியில் பேருந்து ஒன்றை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அதற்கு தீ வைத்தனர். இன்னும் சில பகுதிகளில் கார்கள், காவல்துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட காவலரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் தரப்பு வழக்கறிஞர், “நடந்த சம்பவம் சிசிடிவி கமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது பதிவாகியுள்ளது. இது தெளிவான சட்ட மீறல்” என்று கூறியுள்ளார்
. முன்னதாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பிரதமர் எலிசபெத் போர்ன் கூறுகையில், “இது தெளிவான சட்டவிதிமீறல்” என்றார்.
இதற்கிடையில் சிறுவனின் தாய் டிக்டொக் சமூக வலைத்தளம் மூலமாக பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் ஏற்பாடு செய்துள்ள நினைவஞ்சலிப் பேரணியில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.