மணிப்பூர் அரசு என்னை தடுத்து நிறுத்தியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது- ராகுல் காந்தி!!
வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக ராகுல் காந்தி இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றார். இம்பால் விமான நிலையம் அருகே உள்ள சோதனை சாவடியில் ராகுல்காந்தியின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்நிலையில், மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பதிவில், ” மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதர சகோதரிகளின் குரல்களையும் கேட்க வந்தேன்.
அனைத்து சமுதாய மக்களும் மிகுந்த அன்புடன் வரவேற்றனர். ஆனால், மாநில அரசு என்னை தடுத்து நிறுத்தியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மணிப்பூர் இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து மீள வேண்டும். அமைதி மட்டுமே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.