சந்திரயான்- 3 விண்கலத்தில் லேண்டர் கால்களை வலுவாக உருவாக்க திட்டம்- தரையிறங்கும் போது விபத்தை தவிர்க்க நடவடிக்கை!!
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர் சந்திரயான்-2 விண்கலம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்டபடி ‘லேண்டர் கலன்’ தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. தற்போது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து, ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வருகிற 13-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப் பட உள்ளது. இதற்காக, சந்திரயான்-3 விண்கலம் கடந்த மே இறுதியில் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விண்கலத்தை ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதிக் கட்ட சோதனைகள் நிறைவடைந்த பின்னர், ஏவு தளத்துக்கு ராக்கெட் கொண்டு செல்லப்படும்.
கடந்த முறை ஏற்பட்ட தோல்வியை அடிப்படையாக கொண்டு லேண்டர் மற்றும் ரோவர் கலன்களில் அதிநவீன வசதிகளுடன், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறியதாவது:- சந்திராயான்- 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன. சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கும் போது உடைந்து விடாமல் இருக்கும் வகையில் அதன் கால்கலை வலுவாக வடிவமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தரையிறங்கும் போது விபத்தை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சந்திரயான் -2 தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டு உள்ளன. வினாடிக்கு 2 அல்லது 3 மீட்டர் வேகத்தில் தரையிறங்கினால் கூட அது விபத்துக்குள்ளாகாது. மேலும் பல தடங்கல்கள் ஏற்படுவதை கையாள லேண்டரில் அதிக எரி பொருள்களை சேர்த்துள்ளோம். அதில் இருந்து மீண்டு வருவதற்கான திறன்களும் சேர்க்கப்பட்டு உள்ளது. மற்றொரு அம்சமாக லேசர் டாப்ளர் வேக மீட்டர் எனப்படும் சென்சார் ஒன்றையும் சேர்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.