சென்னையில் செயல்பட்டு வரும் 53 அம்மா குடிநீர் மையங்கள் குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்க முடிவு!!
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார் கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் நேதாஜி கணேசன், சதீஷ்குமார், ஏழுமலை உள்ளிட்டவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினர். ம.தி.மு.க. உறுப்பினர் சுப்பிரமணியம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.
அவரை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கவுன்சிலர் அம்பேத்வளவன் பேசும்போது, அமைச்சரை நீக்குவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அவரை கண்டித்து அவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார். இதற்கு பதிலளித்த கமிஷனர் ராதாகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் உங்கள் வார்டு பற்றிய பிரச்சினைகளை இங்கே பேசுங்கள். கவர்னரை பற்றி பேசுவது மேலும் சட்டசிக்கலை ஏற்படுத்துவதாக அமையும். ஆனால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றார். அப்போது துணை மேயர் மகேஷ்குமார் குறுக்கிட்டு கவர்னரை பற்றி இங்கு பேச வேண்டாம் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் விமலா பேசும் போது, பெண் கவுன்சிலர்களுக்கு பாலூட்டும் அறை 2-வது தளத்தில் அமைக்க வேண்டும். தற்போது பெண் கவுன்சிலர் 3 பேர் தாய்மை அடைந்துள்ளனர். அவர்களின் குழந்தையை மன்றத்திற்கு வெளியே விட்டு விட்டு வர வேண்டிய நிலை உள்ளது என்றார். காங்கிரஸ் குழுத்தலைவர் பேசும்போது, சைதாப்பேட்டை சின்னமலையில் மாநகராட்சியில் பராமரிக்கப்படும் ராஜீவ் சிலை இருக்கும் பகுதிக்கு ராஜீவ் சதுக்கம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். இதையடுத்து 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வரும் அம்மா குடிநீர் திட்டத்தின்மூலம் தினமும் 20 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. 53 இடங்களில் இதற்கான குடிநீர் வினியோக மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு மூலம் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
அம்மா குடிநீர் திட்டத்தை ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான குடிநீரை குடிநீர் வாரியம் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை சென்னை குடிநீர் வாரியத் திடம் ஒப்படைத்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருதி 53 அம்மா குடிநீர் மையங்களை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 139 பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை செய்ய 289 தற்காலிக ஆசிரியர்களும் ஏற்கனவே உள்ள 281 பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 448 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை வைக்க தடையில்லா சான்று வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த கவுன்சிலர்களிடம் கவர்னரை பதவி நீக்கம் செய்ய ம.தி.மு.க. கவுன்சிலர் சுப்பிரமணியம் கையெழுத்து வாங்கினார். மேயர், துணை மேயர் அதில் கையெழுத்திட்டனர்.