சர்க்கரைக்கு மாற்று இனிப்பு பொருளால் புற்றுநோய் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு மாற்றாக காபி, தேநீர் போன்ற பானங்களில் ‘அஸ்பார்டேம்’ எனும் செயற்கை இனிப்பை பயன்படுத்தி வருகின்றனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவான புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC), அஸ்பார்டேமின் பாதுகாப்பு மதிப்பாய்வை நடத்தியிருக்கிறது. அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் அதன் அறிக்கை குறித்து வரும் செய்திகளின்படி, இந்த செயற்கை இனிப்பான அஸ்பார்டேம், ‘மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம்’ என இந்த அமைப்பு முத்திரையிட தயாராகி வருகிறது.
புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த பாதுகாப்பு மதிப்பாய்வு இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் அஸ்பார்டேம் அபாயகரமானதா? இல்லையா? என்பதை மதிப்பீடு செய்வதற்காகவே நடத்தப்பட்டது. ஆனால், ஒரு நபர் இதுபோன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை உட்கொள்வதில் பாதுகாப்பான அளவு எவ்வளவு என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. 1980 வருட ஆரம்பங்களில் இருந்தே டேபிள்-டாப் இனிப்பு எனப்படும் அஸ்பார்டேம், சர்க்கரை போன்ற பொருட்களுக்கு ஒரு செயற்கை மாற்றாகவும், டயட் சோடாக்கள், சூயிங் கம், காலை உணவு தானியங்கள் மற்றும் இருமல் மருந்து போன்ற தயாரிப்புகளிலும் சுவைக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.