;
Athirady Tamil News

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மடோனா: ரசிகர்கள் நிம்மதி!!

0

பாப் இசை பாடல்களின் ராணியாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் அமெரிக்க பாடகி மடோனா (64). சில நாட்களுக்கு முன் இவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. மயக்கமடைந்த அவரை உடனடியாக நியூயார்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுவாச சீராக்கத்திற்காக இண்டுபேஷன் (intubation) சிகிச்சை வழங்கப்பட்டது. மடோனாவிற்கு, ஏற்பட்ட “தீவிர பாக்டீரியா தொற்று” குறித்து முதலில் அவரது மேலாளர் தகவல் பகிர்ந்தார். கடும்தொற்றால் அவர் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டதால், அவர் குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பிறகு, மடோனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது வீட்டில் இருக்கிறார் என்றும் அவர் நலமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் வரும் வாரங்களில் 7-மாத உலக சுற்றுப்பயணத்தை தொடங்கவிருந்தார்.

ஆனால், நோய் தொற்று சிகிச்சையினால் அவர் அதை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. அவர் நலமாக தனது வீட்டிற்கு ஒரு தனியார் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது உடல்நலம் சார்ந்த விஷயங்களில் செய்திகள் எதுவும் வெளியிட விரும்பாத மடோனா, தனது விரிவான உலகச் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஒத்திகையின் இறுதிக் கட்டத்தில் இருந்தார். இரண்டு வாரங்களில் கனடாவில் “செலிப்ரேஷன் டூர்” என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள 45 நகரங்களுக்கு செல்வதற்காக அவர் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்பட்டார்.

இசைத்துறையில் ஈடுபட்டு 40 ஆண்டுகள் ஆவதை கொண்டாடவிருந்த இந்த பயணம் திட்டமிட்டபடி நிகழ்ந்திருந்தால், இது அவரது 12வது சுற்றுப்பயணமாக அமைந்திருக்கும். மடோனாவிற்கு உடல்நலம் குறைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வந்ததிலிருந்து உலகெங்கிலும் இருந்து அவர் பூரண நலமடைய வாழ்த்துக்கள் வந்தவண்ணம் இருந்தன. மடோனாவின் பாக்டீரியா தொற்றுக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மருத்துவர்கள் இது மிகவும் தீவிரமானதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை தேவைப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.