;
Athirady Tamil News

பிரான்ஸ் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது; இனப் பாகுபாடு பிரச்சினையைத் தீர்க்க ஐ.நா அறிவுரை!!

0

பிரான்ஸ் தனது காவல் துறையில் ஆழமாக வேரூன்றியுள்ள இனப் பாகுபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க இளைஞர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் இதுவரை 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான போலீஸார் காயமடைந்துள்ளனர். இது குறித்து பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே கூறும்போது ”போராட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதே முன்னுரிமை. சட்டம் – ஒழுங்கை மீட்டெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கலவரம் குறித்து பாரிஸ் வாசியான மவ்னா கூறும்போது, “நான் 22 வருடங்களாக இங்கு வசித்து வருகிறேன். இம்மாதிரியான வன்முறையை நான் பார்த்ததே இல்லை. கலவரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். இளைஞர்காள் மற்றும் போலீஸாருக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது” என்றார்.

பிரான்ஸ் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. சபை, “பிரான்ஸ் தனது காவல் துறையில் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். 17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞன் பிரான்ஸில் காவல் துறையினரால் கொல்லப்பட்டது எங்களை கவலையடையச் செய்துள்ளது. பிரான்ஸ் இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன? – பிரான்ஸின் நான்டெரி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த நயில் என்ற 17 வயது இளைஞர் காவல் துறையின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்ததில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து பாரிஸின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தச் சம்பவத்தில் அமைதிக்காக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர், போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தும் பல இடங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை காலையில் அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தெற்கே டல்லவுஸ் முதல் வடக்கே லில்லி வரையிலான பல நகரங்களில் ஏராளமான வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக போலீஸார் பலரை கைதுசெய்துள்ளனர். பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இளைஞரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியை போலீஸார் காவலில் வைத்துள்ளனர். இனப் பாகுபாடு காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், கொலையான இளைஞரின் குடும்பம் குறித்த முழுமையான தகவல்களை காவல் துறை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.