;
Athirady Tamil News

ஆறுமுகநேரியில் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக தி.மு.க – பா.ஜனதா இடையே தொடரும் போஸ்டர் யுத்தம்!!

0

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற முறையில் வீட்டு இணைப்புகளுக்கு பேரூராட்சி மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் குடிநீர் சப்ளை அடியோடு முடங்கியது.

ஆற்றில் நீர் வரத்து அறவே இல்லாமல் போனதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனிடையே குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்தநிலையில் தான் இந்த பிரச்சினையை ஆறுமுகநேரி நகர பாரதிய ஜனதா கட்சியினர் கையில் எடுத்தனர். அவர்கள் குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போஸ்டர்களை ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஏன் முன்பே அறிவிக்கவில்லை என்றும் பிரசாரம் செய்து வந்தனர். இதனிடையே தாமிரபரணி ஆறு வறண்டு போனதுதான் குடிநீர் வழங்கலில் ஏற்பட்ட தடங்கலுக்கு காரணம் என்று பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மாற்று ஏற்பாடாக பொது மக்களுக்கு குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோரின் ஏற்பாட்டில் டேங்கர் லாரிகள் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பாபநாசம் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் 4 நாட்களுக்குப் பிறகு ஆறுமுகநேரி பேரூராட்சியில் மீண்டும் குடிநீர் வினியோகம் இயல்பு நிலைக்கு வந்தது. இதனிடையே பேரூராட்சி சார்பில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணத் தொகை நீண்ட காலமாக செலுத்தப்படாமல் இருப்பதுதான் தற்போதைய குடிநீர் பிரச்சினைக்கு காரணம் என்று எதிர்தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டது.

இதற்கு பதிலடியாக பேரூராட்சியின் 7-வது வார்டு கவுன்சிலரும், தி.மு.க நகர இளைஞரணி செயலாளருமான வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆறுமுகநேரி பேரூராட்சியில் 30 ஆண்டுகளாக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பணம் செலுத்தப்படாமல் ரூ.1 கோடியே 25 லட்சம் முன்பு நிலுவையில் இருந்து வந்தது. 2016-ம் ஆண்டில் பேரூராட்சி தலைவராக கல்யாணசுந்தரம் பொறுப்பேற்ற பிறகு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அந்த பாக்கி தொகை முழுவதும் செலுத்தப்பட்டு விட்டது. தற்போது பேரூராட்சி தலைவராக கலாவதி கல்யாணசுந்தரம் உள்ளார்.

இப்போது வரையில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பாக்கி தொகை எதுவும் நிலுவையில் இல்லை. ஆனாலும் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்டண பாக்கி வைத்துள்ளது என்று தொடர்ந்து கூறி வருபவர்கள் அந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.