போலீஸ் டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால், கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்பு!!
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இருவரும் இன்று ஒரே நாளில் பதவியேற்றுக் கொண்டனர். முதலில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்றார். வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலு வலகத்தில் 8-வது மாடியில் உள்ள கமிஷனர் அறையில் சென்னை மாநகர 109-வது கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்றார். இதைதொடர்ந்து அங்கிருந்து விடைபெற்று டி.ஜி.பி.யாக செல்லும் சங்கர் ஜிவால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் புதிய போலீஸ் கமிஷனருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதன்பின்னர் சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்றார். அங்கு 31-வது டி.ஜி.பி.யாக அவர் பொறுப்பேற்றார். பணி ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சங்கர் ஜிவாலிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு விடைப்பெற்றார்.
புதிய டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை தலைமையகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள சங்கர்ஜிவால் சென்னை மாநகர காவல் துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி போலீசார் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர் ஆவார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் 1990-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியை தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து காவல்துறையின் உயரிய பதவியான சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. அந்தஸ்தை அடைந்துள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராகியுள்ள சந்தீப்ராய் ரத்தோர் டெல்லியை சேர்ந்தவர். 1992-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் அதிகாரியான இவர் காவல்துறையில் பல்வேறு பதவிகளை அலங்கரித்து இந்த பதவியை எட்டிப்பிடித்து உள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவி என்பது காவல்துறை அதிகாரிகள் மத்தியில் கனவு பணியாகவே பார்க்கப்படுகிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில் தமிழக அரசு சந்தீப்ராய் ரத்தோரை அந்த பதவியில் அமர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆவடியில் புதிய கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்பட்டபோது அங்கு முதல் கமிஷனராக பொறுப்பு வகித்த ரத்தோர் 2 ஆண்டுகள் அங்கு சிறப்பாக பணியாற்றினார். தற்போது சென்னை கமிஷனராகி உள்ளார். புதிய போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர் இருவருமே காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நலனில் அதிக அக்கறை காட்டுபவர்கள் என்பதால் பொதுமக்கள் மற்றும் போலீஸ் நலன் மேலும் காக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.