தமிழில் பெயர்ப்பலகையை வைக்கும் கடைகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது- ராமதாஸ் கோரிக்கை!!
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வணிகப் பெயர்ப்பலகைகளுக்கு கட்டணம் தண்டலிக்க உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்த முடிவுக்கு வணிகர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. வணிகப்பெயர்ப்பலகைகளுக்கு கட்டணம் தண்டலிக்க உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்துள்ள நிலையில், அதை தமிழ்ப் பெயர்ப்பலகைகளை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசாணையின்படி தமிழை முதன்மைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வணிகப் பெயர்ப்பலகைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அந்தக் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசே செலுத்த வேண்டும். வணிகர்களும் தாங்களாக முன்வந்து தங்கள் கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.