பிரான்சில் கலவரத்தை பயன்படுத்தி கடையை உடைத்து திருட முயன்ற வாலிபர் உயிரிழப்பு!!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நான்டேன் பகுதியில் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. இதில் வன்முறைகள் வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-வது நாளாக இந்த கலவரம் நீடித்தது. வன்முறையை ஒடுக்க பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கிய நகரங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கலவரத்தை பயன்படுத்தி ஒரு கும்பல் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடிக்கும் முயற்சியிலும் இறங்கியது.
வடமேற்கு பிரான்ஸ் பகுதியில் வணிக வளாகம் உள்ளது. நேற்று 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இந்த வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையை உடைத்து உள்ளே செல்ல முயன்றார். அப்போது அவர் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவர் கடைக்குள் நுழைந்து திருட முயற்சி செய்ததாகவும், அந்த சமயம் அவர் கீழே விழுந்து இறந்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.