பெண் விண்ணப்பதாரர்களிடம் அந்தரங்க கேள்விகள்: பில் கேட்ஸ் அலுவலகம் மீது குற்றச்சாட்டு!!
அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான “மைக்ரோஸாஃப்ட்” நிறுவனத்தின் நிறுவனர், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ். தற்போது அவர் அதிலிருந்து விலகி உலகளவில் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது தனிப்பட்ட குடும்ப அலுவலகம், “கேட்ஸ் வென்ச்சர்ஸ்.” இந்நிலையில், அந்த நிறுவனத்தில் வேலைக்கு வந்த பெண் விண்ணப்பதாரர்களிடம், நேர்காணலின் போது வெளிப்படையாக, அந்தரங்கமான பாலியல் கேள்விகள் கேட்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இதன்படி, வேலைக்கு விண்ணப்பித்த சில பெண்களிடம், அவர்களின் கடந்த கால பாலியல் அனுபவங்கள் பற்றிய விவரங்கள், அவர்களின் தொலைபேசிகளில் உள்ள அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவர்களுக்கு ஆபாச படங்களில் உள்ள ஈடுபாடு, பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் குறித்த விவரங்கள் போன்ற
மிகவும் பொருத்தமற்ற கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறினர்.
மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், சில பெண் விண்ணப்பதாரர்களிடம் கவர்ச்சியான நடனத்தில் ஈடுபடுவது குறித்தும், அவர்களின் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். கூடுதலாக, சில பெண் விண்ணப்பதாரர்களிடம், பணத்திற்காக ஆபாசமாக நடனம் ஆடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிகிறது. எனினும், இந்த நேர்காணல் தொடர்பான நடைமுறையானது, “கான்சென்ட்ரிக் அட்வைசர்ஸ்” எனப்படும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இத்தகைய நடைமுறைகளில், விண்ணப்பதாரர்களிடம் அவர்களின் கடந்த கால போதைப்பொருள் பயன்பாடு போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக, விண்ணப்பதாரர்களிடம் தாங்கள் செய்யும் இந்த மதிப்பாய்வு நடைமுறையை (screening) நியாயப்படுத்தி கான்சென்ட்ரிக் அட்வைசர்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது: விண்ணப்பதாரர்களின் உண்மைத்தன்மை மற்றும் அச்சுறுத்தலுக்கு பயப்படாத குணம் ஆகியவற்றை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
நேர்காணலின் போது சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. அதே போன்று அவையனைத்துமே வேலைவாய்ப்பு முடிவுகளை தீர்மானிக்க பயன்படுத்தப்படுவதுமில்லை. இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதற்கிடையில், இது குறித்து எந்த விவரமும் தங்களுக்கு தெரியாது எனவும், தங்களின் பணியமர்த்தல் செயல்முறையில் ஒவ்வொரு விண்ணப்பதாரரையும் மதிக்கின்றோம் என்றும் கேட்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்த விவகாரம் பில் கேட்ஸ் தொடர்பான சர்ச்சைகளில் புதிதாக சேர்கிறது. இதற்கு முன், தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவர் தொடர்பிலிருந்தது சர்ச்சைக்கு வழிவகுத்தது. அடுத்து 2019ல் ஒரு ஊழியருடனான பாலியல் உறவு குற்றச்சாட்டின் காரணமாக் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. இந்த விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்ததாகக் கூறினாலும், கேள்விகள் நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.