திருப்பூரில் போலி ரசீது தயாரித்து ரூ.83 கோடி மோசடி- பட்டய கணக்காளர் கைது!!
திருப்பூர், விருதுநகர், சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள சில வணிக நிறுவனங்களின் பெயரில் போலி ரசீது தயாரித்து ரூ.83 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி செய்த பட்டய கணக்காளர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூர், விருதுநகர், சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள சில வணிக நிறுவனங்களின் பெயரில் எவ்வித வியாபாரமும் செய்யாமல் போலியாக ரசீது தயாரித்து ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக ஜி.எஸ்.டி., அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கோவை மண்டல ஜி.எஸ்.டி., அலுவலகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மண்டல ஜி.எஸ்.டி., மையத்தின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கடந்த 26-ம்தேதி சென்னை, திருப்பூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் தகவல் கிடைத்த சில இடங்களில் சோதனை நடத்தினர். திருப்பூரை சேர்ந்த ஒரு பட்டயக்கணக்காளரின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு எவ்வித வியாபாரமும் இல்லாமல் பல போலியான நிறுவனங்களின் பெயர்களில் ரசீதுகள் தயாரித்தது கணினி உள்ளிட்ட இதர ஆதாரங்களின் மூலம் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலங்களில், அந்த பட்டயக் கணக்காளரும், அவரது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர்களும் போலி ரசீதுகளை தயாரித்து ரூ.83 கோடி ஜி.எஸ்.டி., வரி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் அந்த பட்டயக் கணக்காளர் ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் முக்கிய கட்டத்தில் உள்ளன. இதைத்தொடர்ந்து அந்த பட்டயக்கணக்காளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.