நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு- ரூ.5.40 ஆக நிர்ணயம்!!
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர். கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்வரத்து அதிகரித்து வருவதால் முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-610, பர்வாலா-473, பெங்களூர்-600, டெல்லி-490, ஹைதராபாத்-540, மும்பை-605, மைசூர்-603, விஜயவாடா-535, ஹொஸ்பேட்-560, கொல்கத்தா-570. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.95-க்கும் விற்கப்பட்டது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கோழி கிலோ ரூ.97 ஆக உயர்ந்தது. பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 120 ஆக பிசிசி அறிவித்துள்ளது.