அண்ணாமலை தலைமையில் 4-ந்தேதி பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம்!!
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண்… என் மக்கள்’ என்ற கோஷத்துடன் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார். ராமேசுவரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்கும் இந்த பாத யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதையொட்டி மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வருகிற 4-ந்தேதி (செவ்வாய்) கமலாலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். பாத யாத்திரை செல்லும் வழித்தடங்கள், அந்த பகுதிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் கடந்த மாதம் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நடத்தப்பட்ட நிகழ்ச்சி பற்றிய விவர அறிக்கையும் பெறப்படுகிறது. மாவட்டங்களில் கட்சி வளர்ப்பு, பாராளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ள விபரங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக நிர்வாகிகள் கூறினார்கள். ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஒரு சில மாவட்ட தலைவர்கள் செயல்பாடு சரியில்லை என்று தலைமைக்கு புகார் வந்து இருப்பதாகவும் அவர்களை மாற்றிவிட்டு புதிய மாவட்ட தலைவர்களை நியமிப்பது பற்றியும் ஆலோசித்து வரும் நிலையில் நடைபெற போகும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.