பணி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளரை தனது ஜீப்பில் அழைத்து சென்று வீட்டில் விட்ட நகராட்சி தலைவர்!!
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது கூடலூர் நகராட்சி. இந்த நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவர் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் பணியாற்றிய 30 வருடங்களில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார். அதுவும் நகராட்சி 19-வது வார்டில் புதுப்புதூர் பகுதியில் மட்டுமே அதாவது ஒரே பகுதியில் மட்டுமே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அவர் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அவரை கவுரவிக்க முடிவு செய்தனர். இதற்காக சிறப்பு விழா எடுத்தனர். 19-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கவிதாராணி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு கலந்துக்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் நஞ்சாம்மாள் வேலை செய்தபோது எப்படி நடந்துக்கொண்டார் என்று பெருமையாக தெரிவித்தனர். நகராட்சித்தலைவர் பேசும்போது, பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளுக்கு மேற்கொண்டு உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
தொடர்ந்து நஞ்சம்மாளுக்கு சால்வைகள், சந்தன மாலைகள் அனுவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளை கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு தனது ஜீப்பிலேயே அழைத்து சென்று அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.