ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஆன்லைனில் லாட்டரி விற்ற பெண் உள்பட 4 பேர் கைது!!
ஈரோடு மாவட்டத்தில் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கே.எஸ். நகர், ஸ்ரீரங்கபவனம் திருமண மண்டபம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி இளங்கோ தெருவை சேர்ந்த ரவி(50), ஈரோடு விநாயகர் கோவில் தெரு, மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (50), ஈரோடு மாவட்டம் பவானி கேசரி மங்கலம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா (36), சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த தரநீஸ் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்கள் வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதியும் ஆன்லைன் மூலமாகவும் பரிசு விழும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 விலை உயர்ந்த செல்போன்கள், 40 கேரளா லாட்டரி சீட்டுகள், ஒரு லேப்டாப், மற்றும் 2 கார்கள், ரூ.1.30 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.