;
Athirady Tamil News

கரூரில் விதிகளை மீறியதாக தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கல் குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம்!!

0

கரூர் மாவட்டத்தில் 150க்கும் அதிகமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த குவாரிகள் நடைபெறும் இடங்களில் டிஜிட்டல் முறைப்படி ஆய்வு செய்ய கனிம வளம் மற்றும் புவியியல் துறை இயக்குனர் திட்டமிட்டார். அதன்படி முதல் கட்டமாக கரூர் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி ஆய்வு தொடங்கியது. இந்த ஆய்வினை கண்டித்து கரூர் மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவி கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி இயக்குனர் (நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை) தாசில்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் 42 குவாரிகளில் ஆய்வினை முடித்தனர்.

இதில் விதிமீறல் கண்டறியப்பட்ட 12 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உதவி கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குவாரிகளுக்கு ரூ. 44 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 357 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 30 கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார். இதில் விதிமீறலில் சிக்கிய 12 குவாரிகளில் ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பழனியாண்டிக்கு சொந்தமான குவாரிக்கு மட்டும் ரூ. 23 கோடியே 54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குவாரி அதிபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.