;
Athirady Tamil News

கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2.5 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி பேச்சு!!

0

17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டை இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாடு, சர்வதேச கூட்டுறவு தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கிறது. இதில் தொடக்க கூட்டுறவு சங்கம் முதல் தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பை சேர்ந்த 3600-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள், சர்வதேச கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைச்சகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:- கார்ப்பரேட் துறை போன்ற வசதிகளும், தளங்களும் கூட்டுறவுகளுக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் நலன் மற்றும் விவசாயத்திற்காக மத்திய அரசு ஆண்டுக்கு 6.5 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர். கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் பலன் பெறுகின்றனர்.

நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் விவசாயத்திற்காக ரூ.90 ஆயிரம் கோடி செலவிட்டனர். நாங்கள் பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்காக மட்டும் 3 மடங்கு அதிகமாக செலவு செய்து உள்ளோம். 9 ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகளில் இருந்து ரூ.70 ஆயிரம் கோடி மதிப்புள்ள எத்தனால் வாங்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள் இறக்குமதியை குறைக்க வேண்டும். இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.