;
Athirady Tamil News

வாக்னர் கலகத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவுமில்லை: சி.ஐ.ஏ. இயக்குனர் திட்டவட்டம்!!

0

ரஷியாவில் வாக்னர் குழு எனும் கூலிப்படை அமைப்பு ரஷிய ராணுவம் மற்றும் அதிபர் புதினுக்கு எதிராக ஒரு கலகத்தை தொடங்கியது. இதுபெரும் கிளர்ச்சியாக மாறும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் இதனை அடக்கி விட்டார். இந்த குழுவின் தலைவர் எவ்செனி பிரிகோசின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார். தனக்கும், தன் நாட்டிற்கும் எதிரான இக்கலக முயற்சிக்கு காரணம் யார்? என்பதை கண்டறிய புதின், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர், இக்கிளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் மறைமுக காரணம் என குற்றஞ்சாட்டி வந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. நிறுவனத்தின் இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ், ரஷிய நாட்டின் உளவுத்துறை அமைப்பின் தலைவரான செர்ஜி நரிஷ்கினை அழைத்து அந்நாட்டில் நடந்த அந்த குறுகிய கால கலகத்தில், அமெரிக்காவின் பங்களிப்பு எதுவும் இல்லை என பேசியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. ரஷ்யாவில் உள்ள எஸ்.வி.ஆர்., வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு (SVR Foreign Intelligence Services) தலைவரான நரிஷ்கினுக்கும், சி.ஐ.ஏ.வின் பேர்ன்ஸிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடல், இந்த வாரம் நடந்தது. ரஷியாவின் வாக்னர் கலக முயற்சிக்கு பின்னர், இரு அரசாங்கங்களுக்கிடையே நடைபெறும் உயர்மட்ட தொடர்பு இது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவரான எவ்செனி பிரிகோசின், கடந்த வார ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவருடைய போராளிகள் மாஸ்கோவை நெருங்கியபோது திடீரென அதை நிறுத்தினார். ரஷியாவிற்கு எதிரான வாக்னர் கூலிப்படையினரின் கலகம், அங்கு நடைபெற்ற உள்நாட்டு போராட்டத்தின் ஒரு பகுதி என்றும், அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் அதில் ஈடுபடவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.