பேட்டரி துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை: புது திட்டம் வகுத்த ஜப்பான்!!
உலகின் பெரும்பாலான நாடுகள் சீனாவிடம் இருந்து உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து வாங்குவதால் தங்களுடைய நாட்டில் சொந்தமாக அதை தயாரிக்கும் திறன் குறைந்து விட்டதாக எண்ணுகின்றன. தற்போது மின்சார வாகனங்களுக்கு உலகெங்கும் ஒரு சந்தை உருவாகி அதற்கான தேவை பெருகி வருகிறது. இவற்றின் உற்பத்திக்கு மிக அவசியமானவையாக கருதப்படுவது பேட்டரி தொடர்பான பாகங்கள். இதை தாங்களாகவே தயாரிக்க இந்த நாடுகள் நினைக்கும்போது, அதற்கான தொழில்முறை வல்லுனர்கள், என்ஜினீயர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானும் விதிவிலக்கல்ல. இந்நிலையை சமாளிக்க அந்நாடு ஒரு திட்டம் தீட்டியுள்ளது.
2030-ம் ஆண்டிற்குள் 30 ஆயிரம் பேட்டரி தொடர்பான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த துறையின் தொழிலாளர் சக்தி தற்போதைய 10 ஆயிரத்தில் இருந்து நான்கு மடங்காக உயரும் என எதிர்பார்க்கிறது. பல்லாயிரக்கணக்கான பேட்டரி பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கண்டுபிடித்து பயிற்சியளிக்க, ஜப்பான், அந்நாட்டின் உயர்நிலை பள்ளி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும், மற்றும் தொழிற்கல்வி மாணவர்களையும், நாடு முழுவதும் கண்டறிந்து பல ஆண்டு தீவிரப் பயிற்சியளிக்க திட்டமிட்டிருக்கிறது. இதற்காக மிகப்பெரிய அளவில் ஆட்சேர்ப்பு செய்யவும் முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தகவல்களின்படி, 40 மாணவர்களைக் கொண்ட முதல் குழு, வரும் டிசம்பரில் ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள ஒரு தொழிற்கல்வி பள்ளியில், பேட்டரி தொழில்நுட்பத்தை கற்கத் தொடங்கும். பின்னர், இத்திட்டம் உயர்நிலைப் பள்ளிகள், தொழிற்கல்வி பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது. இன்று நாம் பயன்படுத்தும் லித்தியம்-அயன் பேட்டரியின் கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்தது ஜப்பான். இது மட்டுமல்லாமல் பல அற்புதமான கண்டுபிடிப்புகளின் தளமாகவும் ஜப்பான் இருந்ததை உலகம் அறியும். உலகளாவிய லித்தியம் சந்தை பங்கில் 50 சதவிகிதத்திற்கு மேல் ஜப்பான் தன்னிடம் வைத்திருந்தது. ஆனால், இப்போது அந்நாடு திறமையாளர்களுக்கு கடும் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது.
ஜப்பானில் மட்டுமல்லாது, இந்த நிலை பல வளர்ந்த பொருளாதாரங்களிலும் நிலவுவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா, மற்றும் அமெரிக்காவிலும் மின்னணு வாகன தயாரிப்பாளர்களிடையே திறமையானவர்களை கண்டறிந்து பணியிலமர்த்த கடுமையான போட்டி நிலவுகிறது. எடுத்துக்காட்டாக, பேட்டரி பொறியாளர்களை ஈர்ப்பதற்காக ஒரு தலைமை நிதி அதிகாரி (CFO) பெறும் சம்பளத்தை வழங்குவதாக அமெரிக்க பேட்டரி கார் நிறுவனமான டெஸ்லா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.