அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை – சஜித் பதில் !!
சிறிலங்காவில் மக்களை வீதிக்கு கொண்டுவரவும், நாட்டின் வங்கி முறையை அழிக்கவும் எதிர்க்கட்சி செயற்பட்டு வருவதாகவும், இந்நாட்டின் வைப்பு நிதியை அழிக்க செயற்படுகிறது என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மொட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளினாலும் அதிபரின் செயற்பாடுகளினாலுமே இன்று கடன் மறுசீரமைப்பு பற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதிபர் கோட்டாபய ராஜபக்சவையும் அந்த அரசாங்கத்தையும் கழுத்தைப் பிடித்து தூக்கி எறிய முற்பட்டவர்கள் இந்நாட்டு மக்களே என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அழுத்தம் தாங்க முடியாமல் மக்கள் வீதியில் இறங்குவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை ஏன் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கிறது என்ற உண்மைகளை தர்க்கரீதியாக முன்வைப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதுமட்டுமின்றி இந்தத் தருணத்தில் எடுக்கக்கூடிய மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த திட்டமும் அவரால் முன்வைக்கப்பட்டது.
உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநரும் நிதி இராஜாங்க அமைச்சரும் தொடர்ச்சியாகக் கூறி வந்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கையை கூட அரசாங்கம் நாட்டுக்கு முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் சிறந்த தொடர்புகளைக் கொண்டிருப்பதாக பெருமையடித்துக் கொள்ளும் தற்போதைய அதிபரின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு நல்லதொரு உடன்படிக்கைக்கு ஏன் உடன்பட முடியாது போனது என கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் பக்கம் 16 மற்றும் 17 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த கொடுக்கல் வாங்கல் மிகவும் தளர்வான நிபந்தனைகளின் கீழ் பெறப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் பணத்தை சுரண்டும் மற்றும் துஷ்பிரயோகம் செய்த நிறுவனங்களே மக்களின் பணம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதாக முன்வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பாரதூரமான நிலைமையை ஒவ்வொன்றாக வெளிக் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த நிலை மாற வேண்டுமானால் அரசாங்கம் மாற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நட்பு வட்டார முதலாளித்துவத்திற்கு தேவையான சகல வசதிகளையும் இந்த அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், உகந்த நல்லாட்சியுடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.