;
Athirady Tamil News

காப்பான் பட பாணியில் நியூயார்க் மீது படையெடுத்த பூச்சிகள்!!

0

அமெரிக்காவின் நியூயார்க் நகர குடியிருப்புவாசிகளை அளவில் மிகச்சிறிய பூச்சிகளின் கூட்டம் திண்டாட வைத்திருக்கிறது. சுமார் மூன்று நாட்களாக நியூயார்க்கின் மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் பகுதிகளை சுற்றி பெருமளவில் தோன்றிய இந்த சிறிய பூச்சிகள் சாலையில் செல்பவர்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இடையூறாக இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் சுரங்கப்பாதைகளிலும் இவை ஊடுருவியுள்ளது.

‘பிக் ஆப்பிள்’ என்று வர்ணிக்கப்படும் நியூயார்க்கில் உள்ள பல குடியிருப்புவாசிகள் தங்கள் உடலில் சிறிய கொசு போன்ற பூச்சிகள் ஒட்டிக்கொண்டுள்ளதாக கூறியிருக்கின்றனர். சிட்டி பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநரான பேராசிரியர் டேவிட் லோமன், “இந்த பூச்சிகள், சிறகுகள் கொண்ட அஃபிட்ஸ் (aphids) வகை பூச்சி என்றும், அவை க்னாட்ஸ் (gnats- ஒருவகை கொசு) அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த திடீர் அஃபிட்ஸ் தாக்குதல் அபூர்வமானது என்றாலும், இது வானிலை மாற்றத்தின் விளைவு என்று புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கோரி மோரோ கூறியிருக்கிறார். கார்னெல் பல்கலைகழகத்தில் உள்ள நியூயார்க்கின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை திட்டம் எனப்படும் அமைப்பில் இருக்கும் ஜோடி கேங்லோஃப் என்பவர் ”அஃபிட்களை பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவை பொதுவாக பார்த்தினோஜெனடிக் (parthenogenetic) ஆகும். அதாவது அவற்றில் பெண் இனமே பெண் இனத்தை உருவாக்கும்.

சரியான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் அதன் எண்ணிக்கை பன்மடங்காகக் கூடும்” என்று தெரிவித்திருக்கிறார். இந்த பூச்சிகளால் பொது சுகாதார அபாயம் எதுவுமில்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ள நியூயார்க் நகர சுகாதாரத்துறை, “நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஏதேனும் முக்கியமான சுகாதார தகவலிருந்தால் அதனை பகிர்ந்து கொள்வோம்” என செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்த பூச்சிகளின் படையெடுப்பு அதிகரித்து வரும் வெப்பம், ஈரப்பதம் மற்றும் சமீபத்திய மழை ஆகியவற்றால் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த படையெடுப்பு குறித்து பலர் தங்கள் அனுபவங்களை வீடியோவுடன் பதிவிட்டு வருகின்றனர். ”இந்தப் பூச்சிகள் நியூயார்க் நகரத்தை கூட்டம்கூட்டமாக ஆக்கிரமித்து வருகின்றன. சுரங்கப்பாதைகளிலும் உள்ளன” என்று ஒரு டுவிட்டர் பயனர் குறிப்பிட்டிருக்கிறார். சில பயனர்கள், “இவை பச்சை நிறத்தில் இருக்கிறது. ஆனால் கண்ணால் பார்ப்பது கடினமாக உள்ளது” எனவும் தெரிவித்திருக்கின்றனர். இச்செய்தி வெளியானதிலிருந்து இந்த படையெடுப்பு எப்பொழுது விலகும் என மக்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.