பற்றியெரியும் பிரான்ஸ் – மற்றுமொரு நாடு விடுத்துள்ள எச்சரிக்கை !!
பிரான்ஸ் நகரங்கள் கடந்த ஐந்து இரவுகளாக தொடர்ந்து கலவரத்தால் பற்றியெரிந்து வருகிறது. 17 வயதான இளைஞர் நஹெல் காவல்துறையினரால் சுடப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிலையில், நீதி கேட்டு பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸ் நகரங்கள் பல கலவரத்தில் சிக்கி, பற்றியெரியும் நிலையில், பாரிஸ் நகரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் சனிக்கிழமை ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. அதில், வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.அத்துடன், பிரான்ஸ் நிர்வாகம் இது தொடர்பில் விடுத்துள்ள கட்டுப்பாடுகளை அமீரக மக்களும் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அவசர தேவைகள் எனில், தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்களையும் அமீரக தூதரகம் வெளியிட்டுள்ளது.
காவல்துறை வன்முறைக்கு கொல்லப்பட்ட இளைஞர் நஹெல் உடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கலவரம் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் 45,000 காவல்துறையினரையும் பல கவச வாகனங்களையும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள அமைதியின்மையால் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் தீவைக்கப்பட்டு கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.
முன்னதாக கனடாவும் பிரித்தானியாவும் பாரிஸ் கலவரம் தொடர்பில் தங்கள் குடிமக்களை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.