;
Athirady Tamil News

பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது – மைத்திரி!!

0

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இறுதி யுத்த காலத்தின் சில வாரம் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என்றார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடக சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன்.

எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல்மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் – என்றார்.

கடந்த காலங்களில் கருத்து தெரிவித்த மைத்திரிபால சிறிசேன இறுதி யுத்தத்தின் வெற்றியில் தனக்கும் கணிசமான பங்கு இருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.