தாயின் கர்ப்பை அகற்றப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி!!
கடந்த ஒரு வாரத்துக்குள் நான்கு சிசு மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கர்ப்பையும் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களின் மத்தியிலும், சுகாதார ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பிரசவத்திற்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற தாய்மார்களில் கடந்த வாரம் மாத்திரம் பிறப்பின் போது நான்கு தாய்மார்களின் சிசுக்கள் இறந்துள்ளன. அத்தோடு தாய் ஒருவரின் கர்ப்பையும் அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மாவட்ட
வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளதோடு, மருத்துவர்களின் அக்கறையின்மை மற்றும் உரிய நேரத்தில் உரிய சிகிச்சைகளை வழங்காதுவிட்டடைமேயே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதாவது மருத்துவக் காரணங்களால் தான் தங்களது குழந்தைகள் இறந்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் நான்கு சிசுக்கள் இறந்த தருணங்களிலும், பிரசவத்தாயாரது கர்ப்பை அகற்றப்பட்ட சந்தர்ப்பத்திலும் ஒரு குறித்த பயிற்சி மகப்பேற்றியல் வைத்திய நிபுணரே சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இது தொடர்பில் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தனக்கு கிடைத்துள்ளதாகவும், எனவே தாம் இது குறித்த ஆரம்பபுலன் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.