சபாநாயகர் ஒரு சர்வாதிகாரி!!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆளும் கட்சியின் ஆலோசனைகளுக்கு அமைய ஒருதலைபட்சமாகவும்,சர்வாதிகாரியாகவும் செயற்படுகிறார்.இது குறித்து சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து ஒரு தீர்மானம் எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம் மீதான வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இரு நாள் விவாதத்தை கோரினோம். இது தொடர்பில் நாட்டு மக்கள் பல விடயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு தெரியாமல் மக்களின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவே இருநாள் விவாதம் கோரினோம்.
இருநாள் விவாதம் அவசியமில்லை. சனிக்கிழமை (01) முழு நாள் விவாதத்தை நடத்தலாம். தேவை என்றால் விவாதத்துக்கான காலத்தை நீடித்துக் கொள்ளலாம் என கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் உரையாற்ற இருந்த நிலையில் அவர்களுக்கு அனுமதியளிக்காமல் தன்னிச்சையாக செயற்திட்டம் மீதான வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தினார். வாய்ப்பு கோரியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களை புறக்கணித்து ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். பாராளுமன்றம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு சபாநாயகர் சர்வாதிகாரி போல் செயற்படுகிறார்.
சபாநாயகர் ஒருவர் எவ்வாறு செயற்படக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படுகிறார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி அவரின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுப்போம் என்றார்.