;
Athirady Tamil News

டுவிட்டர் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு- ‘ஒரு நாளைக்கு 1000 பதிவுகள் மட்டுமே பார்க்க முடியும்’!!

0

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தார். ப்ளூ டிக் வசதிக்கு கட்டண நிர்ணயம் செய்தார். இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் டுவிட்டர் திடீரென்று முடங்கியது. இதனால் பயனர்கள் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் தவித்தனர். இதுதொடர்பாக புகார்கள் டுவிட்டர் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன. இதையடுத்து இப்பிரச்சினையை சரி செய்யும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் டுவிட்டர் பயனர்கள் தெரிவித்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க், தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி சரிபார்க்கப்பட்ட பயனர்கள் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்றும், சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும், புதிய சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை படிக்க முடியும் என்றும் அறிவித்தார். அதன் பின் இந்த உச்ச வரம்பை உயர்த்தினார்.

சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும் என்றும், சரிபார்க்கப்படாத பயனர்களுக்கு 1000 ஆகவும், புதிய சரிபார்க்கப்படாத பயனர்களுக்கு 500 ஆகவும் அதிகரிப்பதாக தெரிவித்தார். தேவையற்ற தகவல்களை அழிப்பதற்காக இந்த தற்காலிகமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த புதிய கட்டுப்பாட்டால் டுவிட்டர் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.