குஜராத்தில் பலத்த மழை- இதுவரை 11 பேர் உயிரிழப்பு!!
குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரம், கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. கனமழை, மிக கனமழை காரணமாக ஜூனாகத், ஜாம்நகரர், மோர்பி, கட்ச், சூரத் மற்றும் கபி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. 37 தாலுகாக்களில் 100 மில்லி மீட்டருக்கு மேலாக மழை பதிவாகி உள்ளது. ஜூனாகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 398 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சுவர் இடிந்து விழுந்தது உள்ளிட்ட மழை பாதிப்புகளால் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். கட்ச், நவ்காரி, ஜாம்நகர், ஜூனாகத் ஆகிய மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில மீட்பு குழுவினரும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்கள் ரப்பர் படகு மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். வெள்ளம் அதிகமாக காணப்பட்டதால் இந்திய விமான படையின் ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஜூனாகத் மாவட்டம் சட்ரெஜ் கிராமத்தில் வெள்ளத்தில் தவித்தவர்கள் விமான படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூனாகத், அம்ரேலி, நவ்காரி, வல்சாத் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந் தேதி வரை குஜராத்தில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.