புனே ரெயில் நிலையத்தில் நடை மேடையில் தூங்கிய பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய போலீஸ்காரர்!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரெயில்வே நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் மீது போலீஸ்காரர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூபன் சவுத்ரி என்ற பயனர் டுவிட்டரில், ‘ஆர்ஐபி மனிதநேயம், புனே ரெயில் நிலையம்’ என்ற தலைப்பில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் நடைமேடையில் உறங்கி கொண்டிருந்த பயணிகள் முகத்தின் மீது ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை ரெயில்வே போலீஸ்காரர் ஊற்றிய வண்ணம் செல்கிறார்.
இதனால் ஒரு வாலிபர், முதியவர் உள்ளிட்ட பயணிகள் பதறி போய் எழுந்து பார்க்கின்றனர். அப்போது அந்த போலீஸ்காரர் எதுவும் நடக்காதது போல கடந்து செல்கிறார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் போலீஸ்காரரின் நடவடிக்கையை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டனர். நடை மேடையை ஆக்கிரமித்து பயணிகள் தூங்கியதால் அவர்களை அப்புறப்படுத்துவதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என கூறப்பட்டாலும் அவரது நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என விமர்சித்தனர். பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.
இதற்கிடையே சம்பவம் தொடர்பாக புனே ரெயில்வே கோட்ட மேலாளர் இந்து துபே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நடை மேடையில் தூங்குவது என்பது நடந்து செல்லும் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். அதற்காக போலீஸ்காரரின் செயல் சரியானதல்ல. அவரிடம் பயணிகளை மரியாதையுடன் நடத்தும் படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்காக வருந்துகிறோம் என கூறியுள்ளார்.