செல்போனில் வீடியோ எடுக்க கூறி நீர்வீழ்ச்சியில் குதித்த சென்னை கல்லூரி மாணவர் பலி!!
கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் சுமன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். திருப்பதி அடுத்த எரவாரி பாலம் பகுதியில் பிரபலமான தலக்கோணா நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று முன்தினம் இங்கு சுமன் தனது நண்பர்களுடன் வந்தார். பின்னர் தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் இறங்கி குளித்தனர். சுமன் பாறை மீது ஏறி நின்று நீர்வீழ்ச்சியில் குதிப்பதை வீடியோ எடுக்கும்படி தனது நண்பர்களிடம் கூறினார். சக நண்பர்கள் சுமனை வீடியோ எடுத்த போது பாறையின் மேலிருந்து நீர்வீழ்ச்சியில் குதித்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியின் அடியில் இருந்த 2 பாறைகளுக்கு நடுவே சுமன் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் சுமன் வெளியே வராததால் பதற்றம் அடைந்தனர்.
அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் நேற்று காலை மீண்டும் சுமனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதளுக்கு பிறகு பாறைகளுக்கு இடையில் சிக்கிய சுமனை பிணமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக எரவாரி பாலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமன் பாறையின் மீது இருந்து நீர்வீழ்ச்சியில் குதிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தலக்கோணா நீர்வீழ்ச்சியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கான எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வனத்துறையினர் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 3 வாலிபர்கள் தலக்கோணா நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகி உள்ளனர். ஆபத்தாக உள்ள பாறைகளை நீக்கி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளித்து விட்டு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.