மேம்பாலம் கட்டுவதற்காக டெல்லியில் கோவில்-தர்கா அகற்றம்!!
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள பகுஜன் புராவில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சாலையில் இருந்த கோவில் மற்றும் தர்கா கட்டிடங்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி இன்று காலை பஜன்புரா மெயின் ரோட்டில் கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதில் அனுமன் கோவில் மற்றும் தர்கா உள்ளிட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. போலீசார், துணை ராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறையினர் கட்டிடங்களை அகற்றினர். எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக கட்டிடங்கள் இடிக்கப்பட்ட தாக போலீசார் தெரிவித்தனர்.
கோவில் மற்றும் தர்காவை அகற்ற இரு தரப்பினரிடமும் பொதுப் பணித்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி சம்மதத்தை பெற்ற பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதுகுறித்து டெல்லி வட கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் ஜாய் டிர்கி கூறும்போது, ‘பஜன்புரா பகுதியில் அமைதியான முறையில் கோவில் மற்றும் தர்கா அகற்றப்பட்டன. சஹாரன் பூர் மேம்பாலத்துக்காக சாலையை விரிவுபடுத்த கோவில் மற்றும் தர்கா அகற்ற வேண்டி இருந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன. உள்ளூர் தலைவர்கள் சிறிது கால அவகாசம் கேட்டனர். அதன்பின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இரு மத கட்டமைப்புகளும் அனைவரின் ஒத்துழைப்போடு அகற்றப்பட்டன. அக்கட்டிடங்கள் அகற்றப்படுவதற்கு முன்பு பூஜைகள் செய்தனர்’ என்றார்.