;
Athirady Tamil News

தக்காளி: விஷம் என்று ஒதுக்கப்பட்ட ‘பழம்’ சமையலறையில் பிரதான இடம் பிடித்த வரலாறு!!

0

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ரூ.60க்கு தக்காளி விற்கப்பட்டது. தற்போது, தக்காளியின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

குழம்பு, சட்னி என நமது உணவு பெருமளவில் தக்காளியையே சார்ந்து உள்ளது. உண்மையில், தக்காளி நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியது எப்படி?

தக்காளியின் அறிவியல் பெயர் சோலனம் லைகோபெர்சிகம் (Solanum lycopersicum). தக்காளி சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.

தக்காளியில் 95 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. மீதமுள்ள 5 சதவீதத்தில் மாலிக், சிட்ரிக் அமிலங்கள், குளுட்டமேட்ஸ், வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற சத்துக்கள் உள்ளன.

தக்காளி சிகப்பு நிறத்தில் இருப்பதற்கு லைகோபீன் தான் காரணம்.

`டொமெட்டோ` என்ற ஆங்கில வார்த்தை ஸ்பெனீஷ் வார்த்தையான `டொமெட்` என்பதில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த ஸ்பெனீஷ் வார்த்தை ஆஸ்டெக் மொழியுடன் தொடர்புடையது

ஆஸ்கெட்டில் அவர்கள் சோடோமாட்டில் (Zotomatil) என்று அழைக்கின்றனர். இந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் “Fat water with novel” என்று பொருள்.

தாவரவியலாளர் ரவி மேத்தா, IVOSR இதழில் “தக்காளியின் வரலாறு: ஏழைகளின் ஆப்பிள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், Zotomatil என்ற வார்த்தை முதன்முதலில் 1595 இல் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

“தக்காளி ஒருகுறிப்பிட்ட இடத்தில்தான் தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், சோலனேசி தாவரங்களில் மில்லியன் கணக்கான ஆண்டுகால பரிணாம வளர்ச்சியில் அவை தற்போதைய வடிவத்திற்கு வந்திருக்கலாம்” என்று ரவி விளக்குகிறார்.

தற்போது பெரு, பொலிவியா, சிலி மற்றும் ஈக்வடார் என்று அறியப்படும் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டஸ் மலைத் தொடர்களில் தக்காளி முதன்முதலில் பயிரிடப்பட்டதாக நம்பப்படுகிறது. கிபி 700களில் ஆஸ்டெக்ஸ் மற்றும் இன்காஸ் கலாசாரங்களில் தக்காளி பயிரிடப்பட்டன என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக ரவி தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

எனினும், ஆண்டஸ் பகுதியில் பயிரிடப்பட்ட தக்காளியில் புளிப்பு சுவை அதிகமாக இருந்ததுள்ளது. “ 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் இங்கு குடியமர தொடங்கியபோது பயிரிடப்பட்ட தக்காளிகள் அளவில் சிறியவையாகவும் புளிப்பு சுவை மிகுந்தவையாகவும் இருந்தன” என்கிறார் ரவி.

“சில சுற்றுலா பயணிகள் இந்த செடியை தென் அமெரிக்காவில் இருந்து மத்திய அமெரிக்காவுக்கு எடுத்து சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன. மாயன் மக்கள் அங்கு தக்காளியை பயிரிடத் தொடங்கினர். எனினும், தக்காளி பயிரிடுதல் எப்போது, எப்படி தொடங்கியது என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை.” என ரவி தெரிவித்தார். அதேவேளையில், கி.மு. 500க்கு முன்பே தக்காளி பயிரிடப்பட்டிருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1490களில் தென் அமெரிக்காவை அடைந்த பின்னர், தக்காளி ஐரோப்பாவுக்கு சென்றிருக்கலாம் என்று உணவு பொருள் குறித்த வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய இலக்கியங்களில் தக்காளி பற்றிய முதல் குறிப்பு, 1544 இல் இத்தாலிய மருத்துவரும் தாவரவியலாளருமான ஆண்ட்ரியா மேட்டியோலி எழுதிய “ஹெர்பல்” இல் இருப்பதாக ரவி தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தென் அமெரிக்காவின் தட்பவெப்ப நிலைக்கு ஓரளவுக்கு ஏற்ற மத்திய தரைக்கடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த தக்காளி வசதியாக வளரும்.

ஆரம்பத்தில் ஐரோப்பாவில் விளையும் தக்காளி மஞ்சள் நிறத்தில் இருந்ததாகவும், அவை மஞ்சள் ஆப்பிள்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் ரவி கூறுகிறார்.

ஒரு காலத்தில், பிரிட்டனில் தக்காளி விஷத்தன்மை வாய்ந்த பழமாக பார்க்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் அதன் இலைகள். சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்த பெல்லடொன்னா(deadly nightshade) விஷயத்தன்மை உடையது. இதன் இலையும் தக்காளியின் இலையும் ஒரேபோன்று இருப்பதால் தக்காளியையும் விஷத்தன்மை உடையதாக அவர்கள் கருதினர்.

டேபிள்களை அழகாக அலங்கரிக்கவே தக்காளிகள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடும் ரவி, 1800களில் கூட அமெரிக்காவில் தக்காளியை சந்தேகத்துடனேயே அணுகினர் என்று கூறுகிறார்.

‘விஷத்தன்மை வாய்ந்த ஆப்பிள்’ என்றும் தக்காளி அழைக்கப்பட்டது. தக்காளியை உண்ட பணக்காரர்கள் உயிரிழந்ததாக சில புத்தகங்களில் கூட குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இது முற்றிலும் தவறானது. ஏனென்றால், இந்த இறப்புகளுக்கு காரணம் என்று அழைக்கப்படும் அவர்கள் பயன்படுத்திய ‘பியூட்டர்’ பாத்திரங்கள் என்பது பின்னாளில் கண்டறியப்பட்டது.

“தக்காளியில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இந்த அமிலம் ஈயத்துடன் வினையாற்றும்போது ஃபுட் பாய்சனிங்கை ஏற்படுத்துகிறது” என்று ரவி தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள வெப்பநிலையும், அதன் மண்வளமும் தக்காளி பயிரிடுவதற்கு ஏற்றவை என்று ரவி கூறுகிறார்
தக்காளி எப்படி இந்தியாவுக்கு வந்தது?

போர்ச்சுகீசியர்கள் தான் தக்காளியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்று உணவு வரலாற்றாசிரியர் கேட்டி அச்சையா தனது `Indian Food: A Historical Companion’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

அந்த புத்தகத்தில், “தக்காளி,மக்காச்சோளம், வெண்ணெய், முந்திரி மற்றும் கேப்சிகம் போன்ற பல பயிர்கள் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன ” என்று கேட்டி விளக்கியுள்ளார்.

இந்தியாவில் உள்ள வெப்பநிலையும், அதன் மண்வளமும் தக்காளி பயிரிடுவதற்கு ஏற்றவை என்று ரவி கூறுகிறார்.

“இந்தியாவில் எங்கு முதன்முதலில் தக்காளி பயிரிடப்பட்டது என்பதை கூறுவது கடினமானது. அதேநேரத்தில், பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தக்காளி பயிரிடப்படும் நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் பெருமளவில் பிரிட்டனுக்கு செல்லப்பட்டன” என்கிறார் ரவி.

புளியை விட தக்காளி விலை குறைவாக இருந்ததாலும், அதன் தனித்துவம் மிக்க சுவைக்காவும் கறிகளில் புளிக்கு மாற்றாக தக்காளி பயன்படுத்தப்பட்டன.
நமது அன்றாட உணவில் தக்காளி இடம் பிடித்தது எப்படி?

உணவு வரலாற்று ஆய்வாளரான மருத்துவர் பூர்ணசந்து பிபிசியிடம் பேசுகையில், “தக்காளிக்கு இந்திய மண்ணில் 200 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கிடையாது. ஆரம்பத்தில், தக்காளி அளவில் சிறிதாக இருந்தது. ஆனால், ஹைப்ரிட் தக்காளி வந்த பிறகு, அவற்றின் நுகர்வு வெகுவாக அதிகரித்தது. தக்காளி இல்லாமல் சமையலே இல்லை என்ற நிலைக்குப் போய்விட்டது.” என்று குறிப்பிடுகிறார்.

புளியை விட தக்காளி விலை குறைவாக இருந்ததாலும், அதன் தனித்துவம் மிக்க சுவைக்காவும் கறிகளில் புளிக்கு மாற்றாக தக்காளி பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு தக்காளியை மட்டும் வைத்து சமைக்கும் அளவுக்கு போய்விட்டது. இதெல்லாம், கடந்த, 30 ஆண்டுகளில் நடந்தது” என்று தெரிவித்தார். அதேவேளையில், தேவைக்கு ஏற்ப உற்பத்தி அதிகரிக்காததால், தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது என்று அவர் கூறுகிறார்.

பஞ்சாபி பதார்த்தங்கள் காரணமாக வட இந்திய உணவுகளிலும் தக்காளி முக்கிய இடம் வகிப்பதாக கூறுகிறார். ஜே.என்.யூ.வின் முன்னாள் பேராசிரியரும் உணவு வரலாற்று ஆய்வாளருமான புஷ்பேஷ் பந்த்.

“ஒரு காலத்தில் தெலுங்கு மாநிலங்களிலோ, உ.பி.யிலோ தக்காளி சாப்பிடுவது கிடையாது. ஆனால், பஞ்சாபி தாபாக்களின் தாக்கத்தால், தக்காளி கிரேவிகள் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆங்கிலேயர்களின் தாக்கத்தால், தக்காளி முதல் தக்காளி சாஸ் வரை எங்கும் காணப்படுகின்றன. மோமோஸ், பக்கோடிகள் மற்றும் பர்கர்கள் அனைத்திலும் தக்காளி சாஸ் உள்ளது. இப்போது தெற்கில் தோசையுடன் சிவப்பு சட்னியை வழங்குகிறார்கள். தக்காளி தோசை செய்கிறார்கள் ” என்றார்.

2022ல் இந்தியாவில் 20 மில்லியன் டன்னுக்கும் மேலாக தக்காளி பயிரிடப்பட்டதாக தேசிய தோட்டக்கலை வாரியம் மதிப்பிட்டிருக்கிறது
உலகளவில் 2வது இடத்தில் இந்தியா

தற்போது, உலகளவில் தக்காளி உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 2022ல் 20 மில்லியன் டன்னுக்கும் மேலாக தக்காளி பயிரிடப்பட்டதாக தேசிய தோட்டக்கலை வாரியம் மதிப்பிட்டிருக்கிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரை, மத்தியப் பிரதேசத்தில் 14.63 சதவீதமும், ஆந்திராவில் 10.92 சதவீதமும், கர்நாடகாவில் 10.23 சதவீதமும் தக்காளி பயிரிடப்படுகிறது.

தக்காளியின் விலை திடீரென அதிகரித்தது தொடர்பாக பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ரோகித் குமார் சிங், “சில பகுதிகளில் திடீர் மழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மழைக்காலம் துவங்கியுள்ளதால் தற்போது கடல் அலைகள் அதிகமாக உள்ளன. இவை தேவை – வரத்து இடைவெளியால் ஏற்படும் பிரச்னைகள். விலை உயர்வு தற்காலிகமானது,” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.