;
Athirady Tamil News

குழந்தைகள் நள்ளிரவில் திடீரென கண் விழித்து பீதியில் அலறுவது ஏன்? அதனை நாம் எவ்வாறு கையாள வேண்டும்? !!

0

“முதல் முறை இந்த அனுபவம் ஏற்பட்டபோது, அவன் மயக்கத்தில் இருந்ததாகவே நான் உணர்ந்தேன். அதனால் அவனை எழுப்ப முயன்றேன். அமைதியாக இருக்கச் சொன்னேன். ஆனால், அவன் வேறு ஏதோ ஒரு உலகில் மிகத்தொலைவில் இருந்ததைப் போல் நடந்துகொண்டான்.”

சாண்டியாகோ டி சிலியில் வசிக்கும் ஒலிவியா கார்சியா 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது மகன் ஜுவான் – அப்போது 4 வயது – இரவு நேரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் செயல்படத் தொடங்கிய தருணத்தை நினைவு கூர்ந்தார்.

பாராசோம்னியா என அழைக்கப்படும் இந்த தூக்கக் கோளாறு, நம்மை உறைய வைக்கும் அளவுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த கோளாறில் பாதிக்கப்பட்டவர்கள் சில நேரங்களில் திடீரென கிளர்ந்தெழுவது, பயங்கரமாக அலறுவது, வியர்ப்பது, முழுமையான தூக்கத்திலும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என வித்தியாசமாகச் செயல்படுவார்கள்.

“என் மகன் வேறொரு நபராக மாறினான். அவன் பேசியது எதுவும் புரியவில்லை. திடீரென கத்தினான். எனக்கு அழுகை மட்டுமே வந்தது. நான் அவனைக் கட்டிப்பிடித்து பாசத்தைப் பொழிந்தேன். ஆனால் அவன் மயக்கமடைந்தவன் போல் இருந்தான். அவன் கண்களைத் திறந்த போது, அவனுடைய கருவிழிகள் பெரிதாக விரிவடைந்தன. அது மிகவும் பயங்கரமாக இருந்தது,” என்கிறார் ஒலிவியா.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் (ஏ.ஏ.எஸ்.எம்.) தெரிவித்துள்ள தகவல்களின் படி, இரவு நேரத்தில் இது போல் பயங்கரங்கள் ஏற்படுவது குறித்து “முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை,” என்றும், 1 முதல் 6 வயதுடைய குழந்தைகளில் 5% பேருக்கு இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியானாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25% வரை இந்த வகையான பாதிப்புக்கள் அதிகமாக காணப்படுவதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பிற ஆய்வுகள் மற்றும் மேயோ கிளினிக் போன்ற புகழ்பெற்ற மருத்துவமனைகளின் ஆய்வுகள் தெரிவிக்கும் விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 40% குழந்தைகளுக்கு இதுபோன்ற பாதிப்புக்கள் இருப்பதாகத் தெரியவருகிறது.

இந்த எண்ணிக்கை நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது. மேலும், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குழந்தைகளில் ஒன்றரை வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. (இருப்பினும் “சாதாரண” வயது வரம்பு 6 மாதங்கள் முதல் 12 ஆண்டுகள் வரை இருக்கும்).

பெரியவர்களில் இது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. 2% பேருக்கு மட்டுமே இது போன்ற பாதிப்புகள் தென்படுகின்றன. அதிலும் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1% பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.
இது போன்ற பாதிப்புகள் ஏன் ஏற்படுகின்றன? அவற்றின் அறிகுறிகள் என்ன?

இது போன்ற இரவு நேர திகில் அனுபவங்கள் பொதுவாக N3 எனப்படும் ஒரு கட்டத்தில், அதாவது ஆழ்ந்த உறக்கத்தில் ஏற்படுகின்றன. அவை 5 முதல் 15 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றாலும், சில நேரங்களில் நீண்ட நேரத்துக்கும் நீடிக்கலாம்.

இந்த தூக்க கோளாறுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என்றாலும், தீவிர உடற்சோர்வு, தூக்கம் தடைபடுதல் மற்றும் அதிக காய்ச்சல் போன்ற சில காரணிகள் உள்ளன.

மரபணு சார்ந்த ஒரு காரணியும் உள்ளது. மேயோ கிளினிக் அளித்துள்ள விவரங்களின் படி, இது போன்ற பாதிப்பைக் கொண்டுள்ள குழந்தைகளின் குடும்பத்தினரோ, உறவினரோ இது போல் ஏற்கெனவே பாதிப்பு ஏற்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்தால் அந்த குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கான நரம்பியல் நிபுணர் டாஷியானா முனோஸ் பிபிசி முண்டோவிடம், ஒரு குழந்தை இந்த வகையான கோளாறால் பாதிக்கப்படும்போது எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறார்:

“குழந்தை தூக்கத்தில் இருந்து திடீரென எழுந்துவிடுதல், படுக்கையில் உட்கார்ந்துகொண்டு அச்சத்துடன் பார்ப்பது, அல்லது படுக்கையில் இருந்து குதித்து வெளியேறுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம். திகிலுணர்வுடன் அல்லது கடுமையான பயத்தில் கத்தலாம். இது போல் ஒரு பயமுறுத்தும் வெளிப்பாடுகளில் ஏதாவது ஒன்று நேரலாம்,”

“எப்போதாவது, திடீரென விழிக்கும் குழந்தை, அதற்கு ஏற்படவிருப்பதாகத் தோன்றும் தீங்கிலிருந்து தப்பும் நோக்குடன் அல்லது கண்ணுக்கு தெரியாத ஆபத்தில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் பயந்து ஓடலாம். இந்த வெளிப்படையான முயற்சியாக குழந்தை தப்பிச் செல்ல முயலும் போது, ஏதாவது பொருட்களின் மீது அல்லது சுவர்கள் மீது மோதிவிடுவது போல் வெறித்தனமாக ஓடலாம். அதற்கு குழப்பம் ஏற்பட்டு, பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடலாம். ஏதேதோ புரியாத சொற்களைப் பேசலாம். ஒரே சொல்லை திருப்பித் திருப்பிச் சொல்லலாம். அல்லது இது போல் ஏதாவது ஒன்றைச் செய்யலாம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், உடல் ரீதியாகப் பார்த்தால், இது, “இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தல், வேகமாக மூச்சு வாங்க வைத்தல், அதிக வியர்வை வடிதல், முகம் சிவப்பாக மாறுதல், கிளச்சி, நடுக்கம், கண்கள் நிலைகுத்திக் காணப்படுதல் என பல வித பாதிப்புகளை ஏற்படுத்தலாம்” என உறுதிப்படுத்துகிறார்.

இரவு பயம் உள்ள குழந்தைகளுக்கு அடுத்த நாள் காலையில் எழும் போது இந்த அனுபவங்கள் பொதுவாக நினைவில் இருக்காது. அந்த பயங்கர அனுபவத்துக்குப் பின்னரும், அவர்கள் அமைதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்திற்குத் திரும்புகிறார்கள்.

ஆனால், காலையில் எழுந்தபின், இரவு நடந்ததை யாராவது நினைவுபடுத்தினால் கூட, “ஒன்றும் புரியாதது” போலத்தான் செயல்படுவார்கள். ஜுவானின் தாய் தெரிவித்த விவரங்களின் அடிப்படையில், இதே நிலை தான் அவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இது போன்ற அனுபவங்களுக்கு பொதுவாக தொடர்ச்சிகள் இருக்காது. ஒவ்வொரு விஷயமாக வரிசைப்படுத்தி விவரிக்கவும் முடியாது.

“புரியும் படி எளிமையாகச் சொல்வதென்றால், இது ஒரு கெடுதல் தன்மையற்ற பண்புடன் மூளையில் ஏற்படும் ஒரு நிகழ்வு தான்,” என்று கிறிஸ்டஸ் கத்தோலிக்க பல்கலைக்கழக ஹெல்த் நெட்வொர்க்கின் நிபுணரான தூக்க மருத்துவர் பாப்லோ ப்ரோக்மேன் பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

“பெரும்பாலான இரவு திகில் அனுபவங்களுக்கு பெரிய காரணம் எதுவும் இல்லை என்பதுடன் இது வலிப்பு நோய் போன்றவற்றின் அறிகுறியும் அல்ல. சாதாரணமாக இது போன்ற 90% பிரச்சினைகள் பிற்காலத்தில் அது தானாகவே மறைந்துவிடும். இவை பொதுவான பிரச்சினைகள் தான் என நம்பப்படுகிறது,” என்று அவர் விளக்கினார்.
உண்மையில் அவை கனவுகள் அல்ல

இது போல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் செயல்படுவது கனவுகளில் பயங்கரமாக காட்சிகளைக் காண்பது, தூக்க முடக்கம் அல்லது தூக்கத்தில் நடப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

“திகில் அனுபவங்கள் எந்த வகையான அதிர்ச்சி அல்லது பகலில் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களின் விளைவாகளுடன் தொடர்புடையவை அல்ல. இது முழுக்க முழுக்க உளவியலுடன் தொடர்புடையது,” என்று மருத்துவர் பாப்லோ ப்ரோக்மேன் கூறுகிறார்.

“கூடுதலாக, தூக்க முடக்கம் என்பது சாதாரணமான தூக்கத்தின் போது மட்டுமே ஏற்படுகிறது. ஆனால் இரவு நேர திகில் அனுபவங்கள் ஆழ்ந்த உறக்கத்தின் போது தான் நிகழ்கின்றன,” என்று அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.

தூக்கத்தில் நடப்பதைப் பொறுத்தளவில், “மைய நரம்பு மண்டலத்தின் வேகமான செயல்பாடும் அதீத நடத்தைகளும் காரணமாக உள்ளன, ” என ப்ரோக்மேன் கூறுகிறார்.

“தூக்கத்தில் நடப்பவர்கள் தூக்கத்தில் நடப்பது மட்டுமின்றி, பேசுவது, உட்காருவது, பயம் அல்லது பீதியின்றி வீட்டைச் சுற்றி நடந்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் இரவு நேர திகில் அனுபவங்கள் அப்படியல்ல. அந்த அனுபவங்கள் ஒரு கிளர்ச்சியின் காரணமாகவோ, அட்ரீனல் சுரப்பியில் அதிகமாகச் சுரக்கும் சில வேதிப் பொருட்களின் காரணமாகவோ, அதிக அச்சம் காரணமாகவோ ஏற்படலாம்,”என்றார் அவர்.

இருப்பினும், இரவு நேர திகில் அனுபவங்களுக்கும், தூக்கத்தில் நடக்கும் செயலுக்கும் இடையே இடையே ஒரு உறவு இருப்பதாக அவர் கூறினார். “இரவு நேர திகில் அனுபவத்தைப் பெறுபவர்களில் ஒரு சதவீதம் பேர், காலப்போக்கில், தூக்கத்தில் நடப்பவர்களாக மாறுகிறார்கள்.”
எப்படி சரி செய்யலாம்?

இப்படி இரவு நேர திகில் அனுபவங்களைப் பெறும் ஒரு சம்பவத்தின் போது, குழந்தைக்கு ஆறுதலாகச் செயல்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது.

“நான் அவனை என்னுடன் நெருக்கமாக வைத்திருக்க முயற்சித்தேன். அவனிடம் நான் சொன்னேன்: ‘அம்மா உன்னுடன் இருக்கிறேன். எதையும் பார்த்து பயப்படவேண்டாம்’. ஆனால் நான் யாரென்றே உடனடியாக அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனுக்குச் சற்றும் தொடர்பில்லாத புதிய நபரைப் பார்ப்பது போலவே அவன் என்னைப் பார்த்தான்,” என ஒலிவியா பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இதே பொருளில் பேசிய நரம்பியல் நிபுணர் டாஷியானா முனோஸ், “இது போன்ற சூழ்நிலையில் குழந்தையை எழுப்பி ஆறுதல்படுத்துவது கடினம்” என்றும், உண்மையில், அதற்கான முயற்சிகள் “அவர்களின் பீதியை அதிகரிக்கும் என்பது மட்டுமின்றி நீண்ட நேரத்துக்கு குழந்தையை திகில் உணவுடனேயே வைத்திருக்கும் நிலையும் ஏற்படலாம் அல்லது அதே அனுபவத்தை மேலும் தீவிரமாக்கலாம்,” என்றும் உறுதிப்படுத்துகிறார்.

ப்ரோக்மேன் பேசிய போது, இது போன்ற சூழ்நிலையில் குழந்தைக்கு உதவும் வாய்ப்புக்களும் இருப்பதாக விளக்குகிறார்.

குழந்தை தூங்கச் சென்ற பின் இரவின் முதல் பகுதியில் அதற்கு எந்தத் தொந்தரவையும் அளிக்காமல் இருப்பது, படுக்கைக்குப் போகும் முன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பது போன்ற செயல்களைத் தவிர்த்தல் போன்ற சில முயற்சிகளின் மூலம் இது போன்ற இரவு நேர திகில் அனுபவங்களைக் குறைக்க முடியும் என்று தூக்கம் குறித்த மருத்துவ நிபுணர் கூறுகிறார்.

சில சூழ்நிலைகளில் – உதாரணமாக, இதுபோன்ற திகில் உணர்வுகள் அடிக்கடி ஏற்பட்டால் அல்லது குறிப்பிட்ட மிகவும் பொதுவான வயது வரம்பிற்கு வெளியில் இருப்பவர்களுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.

உண்மையில், குழந்தை ஜுவான் தொடர்ந்து இது போல் அடிக்கடி இரவு நேரத்தில் திகிலில் மூழ்கியதைத் தொடர்ந்து, அவனது தாய் ஒலிவியா அவனை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

“நிலைமை கைமீறிப் போகத் தொடங்கியபோது நாங்கள் அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தோம். மருத்துவர் அந்தக் குழந்தையின் தலையில் ஸ்கேன் செய்யப் பரிந்துரைத்தனர்.”

இந்த ஸ்கேன் என்பது மூளையில் மின் செயல்பாட்டை அளவிட்டு, அவனது தூக்க முறைகளைக் கண்டறிந்து பிரச்சினைகளைச் சரிசெய்யும் ஒரு பரிசோதனையாகும்.

ஆனால், ஜுவான் பெரும்பாலான குழந்தைகளைப் போலவே எந்த வித பிரச்னையும் இல்லாத சாதாரண குழந்தையாக இருந்ததாகவே பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன.

கொரோனா தொற்று பெருமளவு பரவிய போது ஜுவான் இது போன்ற திகில் அனுபவங்களைப் பெற்றதாகத் தெரிவிக்கும் ஒலிவியா, “கொரோனா தொற்றுநோய் காரணமாக வீட்டிலேயே முடங்கியது தான் இதுபோன்ற பிரச்னைக்குக் காரணம் என நான் நம்புகிறேன். ஜுவான் மழலையர் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாள் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளுடன், வீட்டிலேயே பூட்டி வைக்கப்பட்டிருந்தான். அது மிகவும் கடினமான சூழ்நிலை,” என்கிறார்.

உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், கொரோனா தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கமும், அப்போது பொதுமக்கள் அதிக அளவில் இணையதளங்களைப் பயன்படுத்தியதும் தூக்க நோய்களை ஏற்படுத்தியதாகத் தெரியவந்தது.

இதைக் குறிக்க சில மருத்துவ நிபுணர்கள் ‘கொரோனாசோம்னியா அல்லது கோவிட்-சோம்னியா’ என்ற சொற்களைக் கூட அறிமுகப்படுத்தினர்.

உதாரணமாக பிரிட்டனில் ஒரு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா பரவல் தொடங்கிய பின் 6-ல் ஒருவர் என்பதற்குப் பதிலாக 4-ல் ஒருவருக்கு தூக்கமின்மை ஏற்பட்டதாகத் தெரியவந்தது.

இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. “கொரோனா பெருந்தொற்று பொதுமக்களின் தூக்கம் குறித்த நோய்களை அதிகரித்தது. அதுவும் குழந்தைகளுக்கு அதிக பிரச்னைகள் ஏற்பட்டன,” என்கிறார் பாப்லோ ப்ரோக்மேன்.

“இதனால் தான் இரவு நேர திகில் அனுபவங்கள் அதிகரித்தன. இருப்பினும் அது ஒரு சாதாரண பிரச்னையே அன்றி அதைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை,” என்கிறார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.