முதன்மை பணவீக்கம் ஜூனில் வீழ்ச்சி!!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 மேயில் 25.2 சதவீதத்திலிருந்து 2023 ஜூனில் 12.0 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஏப்பிறலில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.
இரு ஆண்டுகளுக்குப் பின்னர், உணவுப் பணவீக்கமானது 2023 மே மாதத்தில் 21.5 சதவீதத்திலிருந்து 2023 யூனில் 4.1 சதவீதம் கொண்ட ஒற்றை இலக்க மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் 2023 மேயில் 27.0 சதவீதத்திலிருந்து 2023 ஜூனில் 16.2 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2023 யூனில் 0.02 சதவீதத்தைப் பதிவுசெய்தது.
இச்சிறிதளவு மாற்றத்திற்கு -0.39 சதவீதமாகவிருந்த உணவல்லா வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை வீழ்ச்சிகள் மூலம் 0.41 சதவீதமாகவிருந்த உணவு வகையில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களின் எதிரீடு காரணமாக அமைந்தது.
பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் 2023 மேயின் 20.3 சதவீதத்திலிருந்து 2023 ஜூனில் 9.8 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.