இது ஹிட் விக்கெட்: சரத் பவாருக்கு உரித்த பாணியில் பதிலடி கொடுத்த ஏக் நாத் ஷிண்டே!!
மகாராஷ்டிர மாநில அரசியலில் நேற்று திடீர் கலகம் ஒன்று ஏற்பட்டது. சரத் பவாரின் தேசியவாத கங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அஜித் பவார், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில் மேலும் 8 எம்.எல்.ஏ.-க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர். 53 எம்.எல்.ஏ.-க்களில் 40 பேர் தன்னுடன் இருப்பதாகவும், இனிமேல் நாங்கள்தான் தேசிவாத காங்கிரஸ் என்றும் அஜித் பவார் தெரிவித்துள்ளார். அரசியல் அனுபவத்தில் இந்தியாவின் தலைசிறந்தவரான சரத் பவாருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதா? என அரசியல் விமர்சகர்கள் மூக்கின்மேல் கைவைத்துள்ளனர். அரசியலில் எந்தவொரு சூழ்நிலையிலும் தெளிவான முடிவை எடுக்கக் கூடியவர் சரத் பவார். இவருக்கும் கிரிக்கெட்டிற்கும் அதிக தொடர்பு உண்டு. இவரது மாமனார் சுழற்பந்து பந்து வீச்சாளர். கூக்லி பந்து வீசுவதில் தலைசிறந்தவர். சரத் பவாரும் ஐசிசி தலைவராக இருந்துள்ளார்.
இதனால் அரசியல் முடிவு எடுக்கப்படும்போது, எந்தநேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பதை, கூக்லி பந்தை எப்போது வீச வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்பார். 2019-ம் ஆண்டு இதேபோன்று அஜித் பவார் கலகத்தை ஏற்படுத்தும்போது, துரிதமாக செயல்பட்டு அதை முறியடித்தார். அப்போது அஜித் பவாரை நம்பி ஏமாந்த பட்நாவிஸ், தங்களுடன் கூட்டணி வைக்க சரத் பவார் சம்மதம் தெரிவித்தார். அந்த நிலையில் எப்போது ‘கூக்லி’ பந்து வீசுவது என்பது எனக்குத் தெரியும். நேற்றைய விவகாரத்திற்குப்பின் சரத் பவாருக்கு உரித்த பாணியில் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே பதில் அளித்துள்ளார். ஏக் நாத் ஷிண்டே கூறுகையில் ”இது புதிய அரசு அல்லை. பிரதமர் மோடி தலைமையின் கீழ் சிவசேனா- பாஜனதா அமைத்த அரசு செயல்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநில முன்னேற்றத்திற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கின்றன.
அஜித் பவார் அதனை நம்பியுள்ளார். அதன்காரணமாக எங்களுக்கு ஆதரவு அளித்து, அரசுடன் இணைந்துள்ளார். பரந்த மனதுடன் அவரையும், அவருடைய எம்.எல்.ஏ.க்களையும் வரவேற்கிறேன். அவருடனான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிர மாநில முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். இரண்டு என்ஜின் அரசு, புல்லட் ரெயில் வேகத்தில் இயங்கும். எம்.வி.ஏ. அரசு உடைந்து விட்டது. சிலர் கூக்லி, க்ளீன் போல்டு குறித்து பேசி வருகிறார்கள். ஆனால், க்ளீன் போல்டு… அதுவும் ஹிட் விக்கெட் என்பதை எல்லோரும் பார்த்து இருப்பார்கள்” என்றார்.