திருப்பதி கோவிலுக்கு மேல் விமானங்கள் பறப்பது ஆகம சாஸ்திரத்துக்கு எதிரானது: பக்தர்கள் கவலை!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய ஆட்டோபஸ் படை வீரர்கள் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அடிக்கடி ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள், ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர்கள் பறந்து செல்லும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் திருப்பதி தேவஸ்தானம், ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தது. கோரிக்கையை பரிசீலனை செய்த விமானத்துறை அதிகாரிகள், ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள் பறக்கக் கூடாத பகுதியாகக் கருதப்படவில்லை. காற்றின் திசையை பொருத்து திருமலையில் மலைகளுக்கு மேலே வழக்கமாக விமானங்களின் பாதை மாற்றப்பட்டு வருகிறது, எனத் தெரிவித்துள்ளனர். ரேணிகுண்டாவில் உள்ள மத்திய விமான நிறுவனத்தைக் கேட்டால் பரிசீலனை செய்யப்படும், எனக் கூறுகிறார்கள். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கடப்பாவில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டது.
இதனால் பெங்களூருவில் இருந்து வரும் விமானங்கள் திருப்பதியை அடுத்த ரேணிகுண்டா வந்து அங்கிருந்து கடப்பா செல்லும்போது, ஏழுமலையான் கோவில் மேலே பறந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தினமும் ஒன்று அல்லது 2 விமானங்கள் ஏழுமலையான் கோவில் மேலே பறந்து செல்வதாக மத்திய அரசு விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் 2 விமானங்கள் ஏழுமலையான் கோவில் மேலே பறந்தன. ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள் பறந்து செல்வது ஆகம சாஸ்திரத்துக்கு எதிரானது, எனப் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.