கொந்தளிக்கும் பிரான்ஸ்! மேயரின் வீட்டுக்கு தீ – 45 ஆயிரம் காவல்துறையினர் குவிப்பு !!
பிரான்ஸில் போராட்டம் வன்முறைாக மாறிய நிலையில், தலைநகர் பாரிசில் உள்ள நகரம் ஒன்றின் மேயரான வின்சென்ட் ஜீன்பிரன் என்பவரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் நீல் (வயது 17) என்ற வட ஆபிரிக்க சிறுவன், கடந்த 5 நாட்களுக்கு முன் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் நிற்காமல் விதிமீறி சென்று விட்டான் எனக் கூறி காவல்துறையிர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டான். இதுபற்றி தெரிந்ததும், மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், அரசுக்கு எதிராக பாரிஸ் உட்பட எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் வன்முறையாக மாறியதில், பாடசாலைகள் மற்றும் காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன.
பாரிசில் வன்முறை பரவியதில், 40-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகியுள்ளன. 170 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 180-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 45 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வின்சென்ட் ஜீன்பிரன் தனது வீட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“எனது வீடு மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கும்பலாகச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
என்னுடைய வீடு மீது அந்தக் கும்பல் கார் ஒன்றை மோத வைத்துள்ளது. ஆத்திரம் தீராமல், வீட்டில் எனது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், எனது மனைவி மற்றும் குழந்தைகளில் ஒன்று காயமடைந்து உள்ளனர்.
இது பேசி விவரிக்க முடியாத ஒரு கோழைத்தன கொலை முயற்சி” என்று அவர் தெரிவித்து உள்ளார்.