ஆபாச படங்கள் ஆபத்து | சிறார் பாதுகாப்புக்காக ஆன்லைன் சட்ட மசோதாவை கடுமையாக்கும் பிரிட்டன்!!
ஆபாசப் படங்களை சிறார் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் ஆன்லைன் பாதுகாப்புச் சட்ட மசோதாவை கெடுபிடிகளுடன் வடிவமைத்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. அவ்வப்போது சட்ட மசோதாவில் கொண்டுவரப்படும் அம்சங்களை மட்டுமே பிரிட்டன் அரசு வெளியிட்டுவரும் நிலையில், இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாவதை தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் எதிர்பார்த்துள்ளன. காரணம், தங்கள் மீது என்ன மாதிரியான கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற பதற்றம்.
இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்புச் சட்ட மசோதாவின் அண்மைத் திருத்தத்தில், பாலுறவு சார்ந்த இணையதளங்களை அணுகுவோரின் வயதை அறியும் முறைகளை உயர்தரமானதாக வடிவமைக்க தொழில்நுட்ப நிறுவனங்களை வலியுறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் அத்தகைய இணையதளங்களை அணுகுவோரின் சில தகவல்களைப் பெற்று, அது உண்மையிலேயே வயது வந்த நபரா அல்லது சிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உருவாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளைப் போல் பிரிட்டனும் சமூக வலைதளப் பயனர்களைக் குறிப்பாக குழந்தைகளை வெறுக்கத்தக்க, அருவருக்கத்தக்க கருத்துகளில் இருந்து வைப்பதற்கு திணறி வருகிறது என்ற விமர்சனங்களை அந்நாட்டு அரசு எதிர்கொண்டு வருகிறது. கருத்துச் சுதந்திரத்தை மீறாமல் அருவருக்கத்தக்க ஆபாச கருத்துகளில் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும் என்பதால் பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொண்டு சட்டத்தை வகுக்க காலம் எடுத்துக் கொள்வதாக பிரிட்டன் அரசு விளக்கி வருகிறது.
அதில் ஒன்றாக ஆன்லைன் தளங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பை தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மைச் செயலாளர்கள் மீது பிரிட்டன் அரசு சுமத்தியுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்ச குறைபாடுகள், விதிமீறல்கள் இருக்கும்பட்சத்தில் தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை வரை விதிக்கப்படலாம் என்ற கடுமையான எல்லையைக் கூட புதிய சட்ட மசோதா உள்ளடக்கியுள்ளது.
இந்நிலையில், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் அமைச்சர் பால் ஸ்கல்லி இந்த சட்ட மசோதாவின் புதிய கெடுபிடி பற்றி கூறுகையில், “பிரிட்டன் அரசாங்கம் குழந்தைகளின் வாழ்க்கையை அச்சுறுத்துலக்கு உள்ளாக்கும் எதையும் அனுமதிக்காது. ஆன்லைன் மூலமாக அபாயமான கருத்துகள், காட்சிகள் அவர்களுக்குச் சென்று சேருமென்றால் அது நிச்சயம் அவர்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதை நாங்கள் தடுப்போம்.
இனியும் குழந்தைகளுக்கு எந்த அசம்பாவிதமும் நடந்துவிடாமல் தடுத்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் துரிதமாக அதேவேளையில் சர்வதேச தரத்தில் ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை வடிவமைத்து வருகிறோம்” என்றார்.
ஆனால், பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் பிரிட்டன் ஆன்லைன் பாதுகாப்பு சட்ட மசோதாவின் சில அம்சங்களைக் கடுமையக எதிர்த்து வருகின்றன. குறிப்பாக, அந்த மசோதாவில் மெசேஜிங் சேவையில் உள்ள எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் முறையை நீக்க வேண்டும் என்ற உத்தரவைக் கடுமையாக எதிர்க்கின்றன. இதனால் வாடிக்கையாளர்களை இழக்கும் சூழல் உருவாகும் என அச்சம் தெரிவிக்கின்றன.